Show all

தருமபுரியில் கைதானார்! தடைசெய்யப்பட்ட விளையாட்டை, பண்பாட்டு இழுக்கோடு, வலையொளியில் முன்னெடுத்த காரணம் பற்றி

வலையொளி மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு வருமானம் ஈட்டியதாகச் சொல்லப்படும் மதன், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்களால் தருமபுரியில் கைது.

06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: வலையொளியில் பப்ஜி என்கிற ஒரு விளையாட்டிற்காக காட்சிமடை (சேனல்) தொடங்கி பேரறிமுகமானவர் முப்பது அகவையுள்ள ‘பப்ஜி’ மதன். இந்தக் காட்சிமடை மூலம் கோடிக்கணக்கில் பணம் வந்ததால் மதனுக்கு சென்னையில் 3 பங்களாக்களும், சேலத்தில் 2 பங்களாக்களும் உள்ளன. மேலும் ஆடி தேர்களும் வைத்திருந்தார்.

குமுகவியல் பொறிஞரான இவர், வருமானம் ஈட்டி வந்த அந்த பப்ஜி விளையாட்டு ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் பப்ஜி இயங்கலை விளையாட்டை தனது வலையொளி காட்சிமடையில் தொடர்ந்து நடத்தி வந்தார்.

தனது பப்ஜி விளையாட்டு காட்சி மடையில், பெண்களை பற்றி மிகவும் அருவெறுக்கத்தக்க வகையில் பேசும் வர்ணனையையும் பப்ஜி மதன் முன்னெடுத்து வந்ததாக தெரியவருகிறது. இவரின் காட்சி மடைக்கு 7 லட்சம் பேர்கள் வரை உறுப்பினர்கள் கவரப்பட்ட நிலையில், அவருக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது.

இந்த நிலையில் பப்ஜி மதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை வடபழனியை சேர்ந்த அபிசேக் என்பவர் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து ஒன்றிய சுழியம் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தினர். மதன் மீது பெண்களிடம் ஆபாசமாக பேசுதல், தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை தொடர்ந்து நடத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தவழக்கில், தனிப்படை அமைத்து காவல்துறையினர் தன்னை தேடுவதை அறிந்து கொண்ட மதன், ஐந்து நாட்களுக்கு முன்னம் தலைமறைவானார்.

இதனால் மதனை பிடிக்க அவரது சொந்த ஊரான சேலம் தாதகாப்பட்டி தனிப்படை காவலர்கள் விரைந்தனர். அங்கு மதன் இல்லாததால் அவரது மனைவி கிருத்திகாவை (26) கைது செய்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில். மதனுக்கு வலையொளியில் தடைசெய்யப்பட்ட விளையாட்டான பாப்ஜியை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தது தெரிய வந்தது.

இந்த வகையில் கிருத்திகாவை, அறங்கூற்றுமன்றத்தில் அணியப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே காவல்துறையினரிடம் சிக்காமல் மதன், அவ்வப்போது தனது இருப்பிடத்தை மாற்றி வந்தார்.

மேலும் தன்னை பிடிக்க முடியாது என்று காவல்துறையினருக்கு அறைகூவல் விட்டு காணொளியும் வெளியிட்டார். அதில் தான் கைது செய்யப்பட்டாலும், விரைவில் வெளியே வந்து வேறொரு பெயரில் லட்சம் லட்சமாக சம்பாதிப்பேன் என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில் தர்மபுரியில் மதன் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படைக் காவலர்கள் நேற்று தர்மபுரிக்கு வந்து கமுக்கமாகக் கண்காணித்தனர். அப்போது குண்டல்பட்டியில் உள்ள ஒரு தனியார் சொகுசு விடுதியில் அறை எண் 102-ல் தங்கியிருந்த மதனை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி கைது செய்தனர்.

அப்போது நடத்திய விசாரணையில் மதன், பெரம்பலூரை சேர்ந்த பார்த்திபன் என்பவருடன் தங்கியுள்ளார். மேலும் கடந்த மூன்று நாட்களாக இருவரும் அந்த விடுதியில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. அங்கு அவரிடம் இருந்து மடிக்கணினி, தேர், படப்பிடிப்பு கருவி மற்றும் ரூ.90 ஆயிரம் தொகை ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது மதன், காவலர்கள் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். தன்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் தவறுசெய்துவிட்டேன். நான் செய்தது அனைத்தும் தப்பு தான் என்று அழுதுள்ளதாகவும் தெரியவருகிறது.

காவலர்கள், மதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி சென்னைக்கு அழைத்து சென்றனர். மேலும் தனியார் விடுதியின் பொறுப்பை கவனித்து வந்த 2 பொறுப்பாளர்களையும் தனிப்படை காவலர்கள் அழைத்து சென்றுள்ளனர். சென்னையில் நேற்று இரவு முதல் மதனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இவர் வலையொளியில் காட்சிமடை நடத்தியது, அந்தக் காட்சி மடைக்கு ஏழு இலட்சம் உறுப்பினர்களைக் கவர்ந்தது, அந்த வகையில், வலையொளி மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு வருமானம் ஈட்டியதாகச் சொல்லப்படுவதெல்லாம் சாதனைப் பட்டியலுக்கு வரவேண்டிய நிலையில், தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை தொடர்ந்ததும், அதை ஆபாச வர்ணனையோடு முன்னெடுத்ததும் இன்றைக்கு பப்ஜி மதனை குற்றவாளி பட்டியலுக்கு தள்ளி இருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.