பாஜகவின் ஒவ்வொரு திட்டமும் குறிப்பிட்ட கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான மக்கள் விரோத திட்டமாக இருக்கிற நிலையில், இந்தியாவின் அறிவாளுமை இனமான தமிழ்மக்கள் பாஜகவிற்கு சிம்ம சொப்பணமாக விளங்கி வருகின்றனர். ஆனால் தமிழிசைக்கு ஆளுநர் பதவி வழங்கப் பட்டதை குமரிஅனந்தன் தொடங்கி ஒட்டு மொத்த தமிழகமும் வணங்கி வரவேற்பது ஏன்? வடக்கு குழம்புகிறது! 18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழிசை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதற்கு- பாஜகவை தனது எதிர்காலமாக தமிழிசை தீர்மானித்ததை முதலாவதாக எதிர்த்த அவரது தந்தையார் குமரிஅனந்தன், தமிழக கட்சித் தலைவர்கள், தமிழகமக்கள், மட்டுமில்லாமல் அவரை விமர்சித்த இணைய ஆர்வலர்கள் உட்பட அனைவரும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை இந்திய அரசு தெலங்கானா ஆளுநராக நியமித்ததற்கு கருத்துவேறுபாடுகளைத் தாண்டி அனைத்து கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். கட்சித் தலைவர்கள் மட்டுமில்லாமல் அவரை விமர்சித்த இணைய ஆர்வலர்கள், தமிழக மக்கள் என பல தரப்பினரும் வாழ்த்து கூறி மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜன் என்று தமிழக அரசியலில் காங்கிரஸ் பின்னணியில் அறியப்பட்டு வளர்ந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். இப்படி காங்கிரஸ் பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து, அவர் காங்கிரஸ் கட்சிக்கு நேரெதிரான பாஜகவில் இணைவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழிசை சௌந்தரராஜன் தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டபோது, பாஜக இந்தியாவில் ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், உண்மையில் தமிழகத்தில் பாஜக தலைவர் பதவியை ஏற்க ஆண்களே தயங்கிய கால கட்டம் அது. அப்படியே வேறு யாருக்கேனும் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தால் அவர் தமிழிசை அளவுக்கு செயல்பட்டிருப்பாரா என்பது கேள்விக்குறிதான். இந்தியாவின் ஆளும் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும் தமிழிசை யாரும் எளிதில் அணுகும்படி தன்னை எளிமையாக வைத்துக்கொண்டார். இதனால், கட்சித் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் நடுவே நல்ல பெயரும் மரியாதையும் ஏற்பட்டது. தமிழக பாஜகவில் எச்.ராஜா போன்ற மூத்த தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்னையான நிலையில், எதிர்க்கட்சிகளின் அனைத்து விமர்சனத்துக்கும் தமிழிசை தனது கட்சி நிலைப்பாட்டிலிருந்து நிதானமாகவே பதில் அளித்தார். சமூக ஊடகங்களில் தமிழிசை பற்றி கருத்துப்படங்களால் விமர்சிக்கப்பட்டபோது அதை எதிர்கொள்ள அவர் தன்னை பக்குவப்படுத்திக்கொண்டார். அரசியலுக்கு வரும் பெண்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள், கேலிகள், அவதூறுகள் எல்லாவற்றையும் அவர் ஒரு மலையைப் போல எதிர்கொண்டார். அவருடைய அணுகுமுறையால் கேலி செய்தவர்களும் விமர்சனம் செய்தவர்களும் கருத்துப்படம் வரைந்தவர்களும் ஓய்ந்துபோனார்களே தவிர தமிழிசை ஓயவில்லை உறுதியுடன் இருந்தார். கடந்த தேர்தலில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும் பாஜக தரப்பில் தேர்தலில் போட்டியிட பலரும் தயக்கம் காட்டினர். பாஜகவினருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் தமிழிசை தேர்தலில் தானே களம் இறங்கி நம்பிக்கை அளித்தார். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில்- அரசின், ஸ்டெர்லைட் ஆதரவு துப்பாக்கிச்சூடு காரணமாகவும், திமுக தரப்பில் கனிமொழி போட்டியிட்டதால் எதிர்த்து போட்டியிடுபவர்கள் நிச்சயமாக தோல்வியடைவார்கள் என்று தெரிந்தும் தைரியமாக களம் இறங்கி சந்தித்தார் தமிழிசை. தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவர் தளர்ந்துபோகாமல் தொடர்ந்து கட்சி பணிகளை செய்து வந்தார். தமிழிசை பாஜக தலைவராக இருந்த காலத்தில், பல அரசியல் தலைவர்கள் ஊடகங்களை எதிர்கொள்ள தயங்கியபோது, இவர் மிக சாதாரணமாக எளிமையாக எதிர்கொண்டார். பாஜகவை தமிழகத்தில் ஓரளவாவது பொதுத்தளத்தில் கொண்டு சேர்த்தவர் தமிழிசை சௌந்தரராஜன் என்றால் அது மிகையல்ல. தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக தமிழிசை அளித்த உழைப்பும் அர்ப்பணிப்பும் அவருக்கு தலைமைக்கான தகுதியை அளித்தது. தமிழிசையின் தமிழக பாஜக தலைவர் பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், பாஜகவுக்கு மிகப்பெரும் எதிர்ப்புள்ள ஒரு மாநிலத்தில், தமிழிசை உழைப்புக்கான, அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம், பாராட்டு கட்சித் தலைமையிடம் இருந்து கிடைக்காமல் போய்விடுமோ என்று அவரது ஆதரவாளர்கள் ஆதங்கத்தில் இருந்தனர். மோடி அரசு மீண்டும் ஆட்சி அமைத்தபோது தமிழிசைக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், தமிழிசை மனம் தளரவில்லை. நிதானமாக தனது கட்சிப் பணிகளை செய்துவந்தார். இந்நிலையில்தான், இந்திய பாஜக அரசு யாரும் எதிர்பாராத வகையில், ஏன் தமிழிசையே எதிர்பாராத வகையில் அவரை தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்து அறிவித்தது. அப்போது ஊடகங்களிடம் மகிழ்ச்சியில் கண்கலங்க பேசிய தமிழிசை “உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. விமர்சனங்களை தாக்கிக்கொண்டால் விமரிசையாக வாழலாம்” என்று கூறினார். தமிழிசை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டது குறித்து பேசிய அவரது தந்தை குமரி அனந்தன் “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப தந்தையாய் மனமகிழ்ச்சி அடைகிறேன்; தமிழிசையின் ஓயாத உழைப்பும், ஆக்கமும்தான் அவருக்கு இந்த உயர்ந்த பதவியை கொடுத்துள்ளது” என்று கூறினார். தமிழிசையை ஆளுநராக நியமனம் செய்து அறிவித்தபோது, அவரை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்கள்கூட கருத்துவேறுபாடுகளைத் தாண்டி, தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கட்சி தலைவர்கள் மட்டுமில்லாமல், இணைய ஆர்வலர்கள், தமிழக மக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். அது அரசியலில் ஒரு பெண்ணாக தமிழிசை எல்லா விமர்சனங்களையும் தாண்டி அவருக்கு கிடைத்த அங்கீகாரத்தை வரவேற்பதாக உள்ளது. தமிழிசைக்கு அளுநர் பதவி அளிக்கப்பட்டிருப்பது அவருடைய உழைப்புக்கான அங்கீகாரம் என்பது நூறு விழுக்காடு உண்மைதான். ஆனால், அவர் இன்னும் வேறு தளங்களில் பரிமளிக்க வேண்டியவர் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,265.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.