அமலாக்கத் துறையால் தான் கைது செய்யப்பட்டிருப்பது, பாஜகவின் அதிரடி என்பதாக தெரிவிக்க விரும்பும் டி.கே.சிவகுமார், வஞ்சப்புகழ்ச்சியாக பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள் என்று கீச்சு பதிவிட்டு வருந்தியுள்ளார். 18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது டெல்லியில் உள்ள டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீட்டில் ரூ.8.50 கோடி சிக்கியதாக சொல்லப்பட்டது. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டி.கே.சிவக்குமார் வீட்டில் சிக்கியதாக சொல்லப்படும் ரூ.8.50 கோடி குறித்து அமலாக்கத்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் முன்பிணை கோரி டி.கே.சிவக்குமார் பதிகை செய்த மனுவும் தள்ளுபடி ஆனது. இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் அணியமானார். 4 நாட்கள் அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியநிலையில், சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது. இந்நிலையில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் தனது கீச்சுப்பதிவில், “என்னைக் கைது செய்யும் இலக்கை வெற்றிகரமாக அடைந்துள்ள பாஜக நண்பர்களுக்கு வாழ்த்துகள். அரசியல் காரணங்களுக்காக வருமான வரித்துறையும், அமலாக்கத் துறையும் என் மீது வழக்குகள் போட்டுள்ளன. பா.ஜனதாவின் வெறுப்பு மற்றும் பழிதீர்க்கும் அரசியலுக்கு நான் பலியாகி உள்ளேன். சட்டத்துக்குப் புறம்பாக நான் எதுவும் செய்யவில்லை. அதனால் கட்சி நிர்வாகிகள், எனது ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் மனம் உடைந்துவிட வேண்டாம். கடவுள் மீதும், அறங்கூற்றுத் துறை மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த பழிதீர்க்கும் அரசியலுக்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,265.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



