Show all

பதட்டத்தில் பீகார் தேர்தல் களம்! கருத்துப்பரப்புதல் கூட்டத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் வேட்பாளர் சிறிநாராயண் சிங்

பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பிறகு இரண்டாவதான இந்த அரசியல்பாட்டு வன்முறை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

09,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பீகார் மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சராக இருந்துவரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சிக்காலம், அடுத்த மாதத்துடன் முடிவடையவிருக்கிறது. அதன் காரணமாக புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல், வரும் புதன் கிழமை தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பிறகு இரண்டாவதான இந்த அரசியல்பாட்டு வன்முறை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த மாதம், முதல் கிழமையில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முன்னாள் பட்டியலினத் தலைவர் சக்தி மாலிக் (37), பீகாரின் பூர்னியா மாவட்டத்திலுள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பீகார் மாநிலத்தில், சியோகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சியோகர் தொகுதியில் ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் சிறிநாராயண் சிங் என்பவர் களத்தில் இருந்தார். அந்தத் தொகுதிக்கு அடுத்துவரும் செவ்வாய்க் கிழமை வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், தீவிரமாக கருத்துப் பரப்புதல் செய்துவந்தார் சிறிநாராயண் சிங். நேற்று கத்சார் என்னும் கிராமப் பகுதியில் கருத்துப்பரப்புதலில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது கூட்டத்தில் அவரைத் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென சிறிநாராயண் சிங் மீதும், அவருடைய ஆதரவாளர்கள் மீதும் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள். இதில் சிறிநாராயண் சிங் உட்பட மூன்று பேர் குண்டு பாய்ந்து பலத்த காயமடைந்தனர். மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில், சிறிநாராயண் சிங்கும் அவருடைய ஆதரவாளர் ஒருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றொருவர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்.

இந்த அதிர்ச்சிச் நிகழ்வு குறித்து பேசிய சியோகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார், இந்தக் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியவர்கள் சிறிநாராயண் சிங்கின் ஆதரவாளர்கள் போலவே கருத்துப்பரப்புதலில் தொடர்ந்து கலந்துகொண்டனர். வாய்ப்பு கிடைத்தபோது துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். சிறிநாராயண் சிங்கின் நெஞ்சுப் பகுதி உட்பட மூன்று இடங்களில் குண்டுகள் பாய்ந்தன. இந்த கொடுஞ்செயலில் ஈடுப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

ஒரு குற்றவாளி, ஆதரவாளர்களாலும் கிராம மக்களாலும் பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார். அவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அவர் அங்கு மரணமடைந்துவிட்டார். அவரிடமிருந்த துப்பாக்கி மீட்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவர் யார் என்பது குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் விசாரித்துவருகிறார்கள் என்றார்.

சுட்டுக் கொல்லப்பட்ட தேர்தல் வேட்பாளர் சிறிநாராயண் சிங் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றவியல் சார்ந்த வழக்குகள் இருப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவிக்கிறார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.