Show all

அமித்சாவுக்கு ஸ்டாலின், குமாரசுவாமி குட்டு! ஹிந்தியை காக்காமல் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும்

ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா காணொளி வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ள செய்திகள் கீச்சுவில் இந்திய அளவில் தலைப்பாகி வருகின்றன.

30,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஹிந்தி மொழியால் நாடு ஒன்றிணைகிறது என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்சா காணொளி வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி ஆகியோர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

ஹிந்தி மொழி நாளையொட்டி அமித்சா வெளியிட்ட காணொளியில், பிற மாநிலத்தவர்கள், தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழியாக ஹிந்தியை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அமித்சாவின் ஹிந்தி திணிப்பு பேச்சுக்கு கீச்சுவில் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்சா. இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் ஹிந்தி இருக்கிறது! இந்தியைக் காப்பாற்றுவதை விட கொரோனா நுண்நச்சில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்சா கவனம் செலுத்த வேண்டும்! என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

அமத்சாவின் இதே அடாவடி குறித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசுவாமி, கீச்சுவில் அமித்சாவின் கருத்துக்கு விரிவாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

பன்முகம் வாய்ந்த கலாசாரம், பாரம்பரியம் வாய்ந்த இந்தியாவில் கன்னடத்தவர்கள் உட்பட ஹிந்தி பேசாத பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது ஹிந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று தொடங்கி 10 இடுகைகளை அவர் பதிவிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு எல்லா மொழிகளுக்கும் ஒரே தகுதியையே வழங்கியுள்ளது. ஹிந்தி மொழி ஒருபோதும் தேசிய மொழியாக இருந்ததில்லை. எனவே, டெல்லியில் இருப்பவர்கள் அதை வேறு மாதிரியாக புரிந்து கொள்ளக்கூடாது என்று குமாரசுவாமி கூறியுள்ளார்.

எனவே ஹிந்திநாள் என்ற பெயரில் நடத்தப்படும் ஆண்டு நிகழ்ச்சி, மென்மையாக ஹிந்தி மொழியை திணிப்பதே தவிர வேறு அல்ல. எனவே, முதலும் முடிவுமாக அதை நான் எதிர்க்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பேசப்படும் எல்லா மொழிகளும் அவற்றுக்கு என தனி வரலாறு, கலாசாரத்தைக் கொண்டுள்ளன. அது ஹிந்தி மொழியை திணிக்கும் சிலரது முயற்சிக்காக அந்த மாண்புகள் தியாகம் செய்து கொள்ளப்படாது என்று குமாரசுவாமி கூறியுள்ளார்.

இந்திய அரசு ஹிந்திநாள் என்பதற்கு பதிலாக இந்திய மொழிகள் நாள் என்ற பெயரில் ஒரு நாளைக் கடைப்பிடிக்கலாம். அந்த நாளில் நாட்டில் உள்ள எல்லா மொழிகளும் அவற்றின் பெருமைகளை கொண்டாடினால், அதை நான் நிச்சயமாக ஆதரிப்பேன் என்று குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாநிலத்தில் ஆட்சியில் இருப்பதால் அதை வைத்துக் கொண்டு ஹிந்தி மொழியை, புதிய கல்விக்கொள்கையில் உள்ள மும்மொழிக்கொள்கை வாயிலாக கர்நாடகாவில் புகுத்தலாம் என்று பாரதிய ஜனதா கட்சி நினைக்கிறது. அந்த முயற்சி கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளும்.

கர்நாடகா மாநிலத்தவர்கள் மென்மையானவர்கள் என்றாலும், தங்கள் மீது யாராவது எதையாவது திணிக்க முற்பட்டால் அவர்கள் முழு பலத்துடன் அந்த முயற்சியை எதிர்கொள்வார்கள். இதை பாரதிய ஜனதா கட்சி மறந்து விட வேண்டாம் என்று குமாரசுவாமி கடுமையாக எச்சரித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.