ஏர்டெல்லின் கழுத்தில் போட்டு, ‘ஒப்பந்தப்படியான ஏர்டெல்லின் வருமானத்தில் பங்குத் தொகையை’ வசூலிப்பதற்கு நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த துண்டு- உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. சரக்குசேவைவரி வருவாயை நடுவண் அரசிடம் இருந்து வசூலிக்க முடியாமல் புலம்புகிறது தமிழகஅரசு 06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘கழுத்தில் துண்டைப் போட்டு வசூலித்தான் கடன் கொடுத்தவன்’ என்ற ஒரு தமிழ்ச் சொலவடை உண்டு. ஏர்டெல்லின் கழுத்தில் போட்டு, ‘ஒப்பந்தப்படியான ஏர்டெல்லின் வருமானத்தில் பங்குத் தொகையை’ வசூலிப்பதற்கு நடுவண் பாஜக அரசுக்கு கிடைத்த துண்டு- உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடுவண் அரசுக்கு செலுத்த வேண்டிய ‘ஒப்பந்தப்படியான வருமானத்தில் பங்குத் தொகையை’ உடனடியாக செலுத்த வேண்டும் என உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தப்படியான வருமானத்தில் பங்கு நிலுவைத் தொகையை நடுவண் பாஜக அரசுக்கு செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த பிறகு பாக்கித்தொகையை செலுத்துவதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் நடுவண் அரசுக்கு, ‘ஒப்பந்தப்படியான வருமானத்தில் பங்குத்தொகை’ ரூ35,586 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இது மாதிரியே தான் நடுவண் அரசுக்கு செலுத்த வேண்டிய 50 ஆயிரம் கோடி ரூபாயை தர அவகாசம் கேட்ட வோடபோன் நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச அறங்கூற்றுமன்றம் நிராகரித்தது. தற்போது 2,500 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமை ஆயிரம் கோடி ரூபாயும் தருவதாக வோடபோன் அளித்த உறுதியை அறங்கூற்றுமன்றம் ஏற்கவில்லை. நடுவண் அரசின் நிதி பகிர்வு குறைந்ததே தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறைக்கு காரணம் என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்துக்கு நடுவண் பாஜக அரசு சார்பில் 60 விழுக்காடு நிதி தருவதை குறைத்து விட்டது. இதனால், பல்வேறு திட்டத்துக்கு கூடுதலாக 3,500 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நடுவண் அரசின் உதய் திட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சேர்ந்ததன் விளைவாக 22,815 கோடி கடனை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக சரக்குசேவை வரி மூலமான வரி வருவாய் நடுவண் பாஜக அரசு தமிழகத்துக்குப் பாக்கி வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 3794 கோடியும், நிலுவை தொகை 4073 கோடியும் தர வேண்டியுள்ளது. நடுவண் பாஜக அரசிடம் இருந்து பாக்கிகளை வசூலித்து தமிழகம் தன்னிறைவு அடைய ஏதாவது வழி கிடைத்தால் தேவலாம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



