அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் அதையொட்டி அவர் வருகை புரிய வாய்ப்புள்ள பகுதிகளில் வறுமை மறைப்பு ஏற்பாடுகள் அதிரடியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 06,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அரசு முறைப் பயணம் இது. இந்தப் பயணத்தின்போது டெல்லியில் தலைமைஅமைச்சர் மோடியும் அமெரிக்க அதிபர் டிரம்பும் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா அமெரிக்கா இடையேயான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக முதன்மையான கலந்துரையாடலில் ஈடுபட உள்ளனர். அப்போது இந்தியா அமெரிக்கா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் டிரம்ப் கலந்துகொள்கிறார். இதற்காக நிறைய வறுமை மறைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள குடிசைப் பகுதிகளை மறைக்கும் வகைக்கு ஏழுஅடி உயரத்துக்கு அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சுவர் ஒன்றை அகமதாபாத் மாநகராட்சி கட்டிவருகிறது. மக்களின் ஏழ்மை நிலையை டிரம்ப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்தச் சுவர் கட்டப்படுகிறதாம். இதற்கிடையே தாஜ்மகாலைக் காண டிரம்ப் உத்தரபிரதேச மாநில ஆக்ராவிற்கு செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் அமெரிக்க அதிபரை வரவேற்பதற்காக ஆக்ரா நகரைப் புதுப்பொலிவாக்கும் பணிகளை உத்தரபிரதேச அரசு முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆக்ரா நகரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



