மனிதன் தவிர்த்து அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீரும் உணவும் மட்டும் போதுமானதாக இருக்கிறது. அவைகள் தங்கள் வாழ்க்கையின் முழு நேரமும் அவற்றை மட்டுமே தேடி அலைகின்றன. மனிதன் கருவிகளை உருவாக்கி நீரை எளிதாகப் பெற்றுக் கொள்கிறான். உணவை பண்டமாற்று முறையில் தடையில்லாமல் பெற்றுக் கொள்கிறான் இது நேற்று வரையிலான நடவடிக்கையாக இருந்தது. இன்றைய நடுவண் அரசின் அறிவுரையை செவி கொள்ளும் போது, நாளைய வாழ்க்கை? நினைக்கவே அச்சமாய் இருக்கிறது. 05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அணைகள் வறண்டதால், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு நடுவண் அரசு அறிவுரை வழங்கியுள்ளது. அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தது. இதையும் தாண்டி பெரிய அளவில் ஊர்க்கிணறுகள் இருந்தன. குளம், குட்டைகள், ஏரிகள் இருந்தன. ஆறுகளில் தண்ணீர் இருந்தன. வீடு வீடுகளுக்கு தூய்மையாக்கப் பட்ட குடி நீர் வண்டிகளில் விநியோகம் செய்யப்பட்டன. வெள்ளையர் ஆட்சியில் கூட இந்த நிலையிருந்தது. நீரை காசு கொடுத்து வாங்கிக் குடித்த குடும்பமோ, நீருக்காக அலைந்த குடும்பம் எதுவும் இருந்ததாகச் சொல்ல முடியாது. சென்னையில் குடி நீரை மட்டும் காசு கொடுத்து வாங்கி வந்த நிலைமாறி, தற்போது மற்ற பயன்பாடுகளுக்கான நீரையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்புறம் அரசு என்பது எதற்காக? அந்த அரசுக்கு மக்களாட்சி என்ற பெயர் எதற்காக? அரசுக்கு வரி எதற்காக? வரி மட்டும் போதாது என்று சாரயம் விற்கிற அரசுக்கு நமது பண்பாட்டைத் தொலைப்பது எதற்காக? புரியாத புதிராக இருக்கிறது நமது இக்கால வாழ்க்கை முறை! மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகம் சுற்ற செலவு செய்த பணத்தைக் கொண்டு, காசு கொடுத்து கூட நீரை வாங்கி, அணைகளை நிரப்பி, குறைந்த பட்சம் ஒரு மாநிலத்தின் நீர்த் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமே. சிக்கன நடவடிக்கைக்கு ஆலோசனை சொல்கிற நடுவண் நீர் ஆணைய உறுப்பினர் எஸ் கே ஹல்தார் அவர்களுக்கு இது புரியாதா? -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,157.
இது தொடர்பாக, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு நடுவண் நீர் ஆணைய உறுப்பினர் எஸ் கே ஹல்தார் அனுப்பிய சுற்றறிக்கையில், மாநிலங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் தண்ணீரை சாதுர்யமாக பயன்படுத்த வேண்டும். அணைகள் நிரம்பும் வரை தண்ணீரை குடிப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.
ஆறு மாநிலங்களில் உள்ள முதன்மை அணைகளில் 22 விழுக்காடு நீர் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நீர் அளவின் சராசரியை விட குறைவு. இதனை தொடர்ந்து இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



