கடந்த ஒரு கிழமையாக தொலைக்காட்சி விளம்பரங்களில் முதன்மைப்படுத்தப் பட்டிருந்த, கோவை ஈசா மையத்தில் முன்னெடுக்கப்பட்ட 26வது ஆண்டு மாசிவன்இரவு விழா, நடிகைகள், அரசியல்வாதிகள் புடைசூழ, ஜக்கி வாசுதேவின் வேறுபாடான நடனத்துடன் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 10,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கோவையில் உள்ள ஈசா மையத்தில் 26வது ஆண்டு மாசிவன்இரவு விழா இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மாசிவன்இரவு சிறப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வின் போது ஆதியோகி என்ற பெயரில் ஈசா மையம் நிறுவியுள்ள சிலை- மின்விளக்குகளால் ஒளிரச் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு இசைக்கலைஞர்கள் தங்களது இன்னிசை மூலம் விழாவிற்கு சிறப்பு செய்தனர். வேறுபாடான நடனங்களும் மாசிவன்இரவு விழாவை சிறப்பித்தன. பல்வேறு மொழிகளில் பாடல்கள் இசைக்கப்பட்டன. அவற்றுக்கு பார்வையாளர்கள் நடனமாடினர். பிரபல திரைப்பட பின்னணி பாடகர் கார்த்திக்கும் விழாவில் பங்கேற்று பாடல்களைப் பாடினார். ஜக்கி வாசுதேவும் பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமூட்டினார். ஆட்டம், பாட்டத்திற்கு நடுவே தியானமும் நடைபெற்றது. இரவு முழுவதும் நடைபெற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, ஜி.கே.வாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகைகள் காஜல் அகர்வால், நிக்கி கல்ராணி, ஸ்ரேயா உள்ளிட்டோரும் பங்கெடுத்தனர். கடந்தஆண்டு நடைபெற்ற விழாவில் நடிகை காஜல் அகர்வால், தமன்னா, அதிதி ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



