Show all

தலைக்கவசம் அணியாததால் அபராதம்! காசு இல்லாததால் தாலியைக் கழற்றிக் கொடுத்த பெண்

இணையத்தைத் தீயாக்கிக் கொண்டிருக்கிற அதிர்ச்சி செய்தி. ‘காசு இல்லைங்க ஐயா, தாலியை வேணா வித்துடுங்க’ தலைக்கவசம் அணியாததால் அபராதம் விதித்த போக்குவரத்து காவலரிடம் மன்றாடிய ஒரு கன்னடப் பெண். 

17,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பாரதி விபூதி (30). இவர் தனது கணவனுடன் இரு சக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, நகரப் பேருந்து நிலையம் அருகே இவர்களை மடக்கிய காவலர்கள் தலைக்கவசம் அணியாததற்கு 500 ரூபாய் அபராதம் கேட்டுள்ளனர்.

அப்போது, கையில் காசு இல்லை என்று கூறிய பாரதி விபூதி, கணவருடன் கட்டில் வாங்குவதற்காக ரூ.1,800ஐ எடுத்துக்கொண்டு சந்தைக்கு சென்றதாகவும், 1,700க்கு கட்டிலை வாங்கி, மீதமுள்ள 100 ரூபாயை காலை உணவுக்காக செலவிட்டதாகவும் காவலர்களிடம் தெரிவித்தார்.

ஆனால், அபராதத்தை கட்டியே ஆக வேண்டும் என்று காவலர்கள் கூறிவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாரதி விபூதி தன்னுடைய தாலியை கழற்றி அதை விற்று அபராதத்தை எடுத்துக்கொள்ளுமாறு காவலர்களிடம் கோரிக்கை வைத்தார். 

இதை கவனித்துக்கொண்டிருந்த அப்பகுதியில் சென்றவர்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த வழியாக சென்ற சில மூத்த காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு விபூதியையும் அவரது கணவரையும் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

சாலை விதிகளைக் கடைபிடிக்காவிட்டால் அபராத தொகையை கட்ட வேண்டும் என்றாலும் காசு இல்லாததால் பெண் ஒருவர் தாலி சங்கிலியை கழற்றிக் கொடுத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.