அரசின் தங்கப் பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. அதைப் பங்குச் சந்தையில் வாங்க முடியுமாம். 16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசின் தங்க பத்திரங்களை நாளைமுதல் வாங்குவதற்கான அறிவிப்பினை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அறிவித்துள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு, இந்திய அரசு முன்னெடுக்கும் திட்டம் இந்தத் தங்கப் பத்திர விற்பனை. இது நீண்டகால நோக்கில் நல்ல லாபம் கிடைக்க வழிவகுக்கும். சிறந்த முதலீடு என்று சொல்லப்படுகிறது. இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் தங்க பத்திர விற்பனை நாளை முதல் தொடங்கவுள்ளது. இந்த முதலீட்டு திட்டமானது தங்கத்தில் முதலீடு செய்து லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு, ஒரு சிறந்த முதலீட்டு திட்டம் என்று சொல்லப்படுகிறது. 12ம் கட்ட வெளியீடான இந்த தங்க பத்திரத்தினை வாங்க கடைசி நாள் வெள்ளிக் கிழமை ஆகும். அடுத்த செவ்வாய்க் கிழமை இதன் வெளியீட்டு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த தங்க பத்திரங்களை நாம் இயங்கலை மூலமாக வாங்கிக் கொள்ள முடியும். இந்தத் தங்க பத்திர விற்பனையில் கிராமுக்கு 4,662 ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இயங்கலை மூலமாக விண்ணபிப்பவர்கள் மற்றும் பணம் செலுத்துபவர்களுக்கு, கிராமுக்கு 50 ரூபாய் சலுகையினையும் பெற்று 4,612 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக ஒருவர் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சமாக 4,000 கிராம்கள் வரை முதலீடு செய்து கொள்ளலாம். அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் 20 கிலோ கிராம் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்த பத்திரங்கள் இந்திய பங்கு சந்தைகளான என்எஸ்இ மற்றும் பிஎஸ்இயில் வணிகம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு 8 ஆண்டுகள் முதிர்வுகாலம் உண்டு. ஆனால் 5 ஆண்டில் இருந்தே வெளியேறும் விருப்பங்கள் உண்டு. உலோகத் தங்கத்தினைப் போலவே நீங்கள் இந்த தங்க பத்திரத்தினை பிணையமாக வைத்து கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்த பத்திரங்கள் இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால் இறையாண்மை தரம் கொண்டவையாகவும் உள்ளன. இந்தத் தங்க பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 2.5 விழுக்காடு வட்டி உங்கள் வருமானமாக சேர்க்கப்பட்டு, அதற்கு நீங்கள் வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும். வட்டி வருவாயில் டிடிஎஸ் விதிக்கப்படுவதில்லை. தங்கப் பத்திர திட்டத்தில் முதலீடு செய்து 8 ஆண்டுகள் முதிர்வடையும் வரை காத்திருந்தால், சொத்துவரி இருக்காது. ஒரு வேளை உங்களால் எட்டு ஆண்டு வரை நீடிக்க முடியவில்லை என்றால் நீங்கள் உங்கள் தங்கப் பத்திரத்தை பங்குச் சந்தையில் விற்றுக் கொள்ளலாம் (அல்லது) குறைந்தது ஐந்து ஆண்டு தாண்டினால் உங்கள் தங்கப் பத்திரத்தை நீங்கள் பணமாக மாற்றலாம். ஆனால் இந்த இரண்டிலும் சொத்துவரி உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.