18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஏஎன்-32 விமானங்களுக்கான உதிரி பாகங்கள் வாங்கியதில் நடுவண் பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி லஞ்சம் வழங்கியதாக உக்ரைன் அரசு குற்றச்சாட்டு கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான விசாரணைக்கு நடுவண் உள்துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று நடுவண் அரசுக்கு, உக்ரைன் தேசிய ஊழல் எதிர்ப்பு அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது. இந்திய விமானப்படையின் போக்குவரத்துப் பிரிவில் பயன்படுத்தக்கூடிய நடுத்தர ரக ஏஎன்-32 வகை விமானங்களுக்கு உதிரிப் பாகங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் அரசின் பெட்ஸ்டெக்னோ எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கும், நடுவண் பாதுகாப்பு துறைக்கும் (விமானப்படை) இடையே உதிரிப்பாகங்கள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த உதிரிப்பாகங்கள் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு விநியோகம் செய்வதாக இருந்தது. இதற்கிடையே உக்ரேன் நிறுவனம், இந்த உதிரிப்பாகங்கள் விநியோகம் செய்வது தொடர்பாக குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த ஒப்பந்தம் நடந்து 11 மாதங்களுக்குப் பின் உக்ரைனின் தேசிய ஊழல் தடுப்பு அமைப்புக்கு ஒப்பந்தம் செய்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தியது, ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தியது, கையொப்பம் இட்டது ஆகியவற்றின் அடையாளங்கள் குறித்து உக்ரைன் ஊழல்தடுப்பு அமைப்பு விசாரிக்கத் தொடங்கியது. மேலும், குளோபல் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் தொடர்பு, பணம் பரிமாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துபாயில் உள்ள நூர் இஸ்லாமிக் வங்கி ஆகியவற்றிடம் விசாரணை நடத்த முடிவு செய்தது. இது தொடர்பாக அந்த வங்கிக்கும், குளோபல் மார்கெட்டிங் நிறுவனத்துக்கும் உக்ரைன் அரசு கடிதம் எழுதி, பணப்பரிமாற்ற விவரங்களைக் கேட்டுள்ளது. இது தொடர்பாக நடுவண் உள்துறை அமைச்சகத்துக்கும் உக்ரைன் அரசின் ஊழல் தடுப்பு அமைப்பு கடிதம் எழுதி, விசாரணைக்கு உதவும்படி கோரியுள்ளது. இந்தக் கடிதத்தை கீவ் நகரில் உள்ள இந்தியத்தூதர் வாயிலாக அனுப்பியுள்ளது உக்ரைன் அரசு. இந்த ஊழல் விவகாரம் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கீச்சில் விடுத்த அறிக்கையில், உக்ரைன் அரசிடம் இருந்து ஏஎன்32 விமானங்களுக்கு உதிரிப்பாகங்கள் வாங்கியது தொடர்பாக பாதுகாப்புத் துறையின் அதிகாரிகள் கோடிக்கணக்கில் துபாய் வங்கி வழியாக லஞ்சம் பெற்றதாக செய்திகள் வந்துள்ளன. நாட்டைப் பாதுகாக்கும் காவலாளி எனச் சொல்லி திரியும் மோடி, உங்கள் அரசின் பாதுகாப்பு துறையில் இருக்கும் ஊழல் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,805.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



