11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைகழகத்தில் நடந்த கான் அப்துல் கபார் கான் நினைவு சொற்பொழிவு கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கந்த் பேசியதாவது: இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. கிழக்கு மாநிலங்கள் தொடர்ந்து பின் தங்கி வருகின்றன. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், பீஹார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் தான், உலகளவில் சமூக முன்னேற்ற விசயத்தில் இந்தியா பின் தங்கிய நிலையில் இருக்க காரணம். என்று அமிதாப் கந்த் கூறியுள்ளார். தொழில்கள் முன்னேற நடவடிக்கை எடுத்திருந்த போதும் கூட மனிதவள மேம்பாட்டு குறியீடு பட்டியலில் நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம். அப்பட்டியலில் 188 நாடுகள் இடம் பெற்றுள்ளன. நாம், 131வது இடத்தில் இருக்கிறோம். கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியா மிக பின் தங்கிய நிலையில் உள்ளது. மாணவர்களின் கற்றல் திறமை மிக மோசமாக உள்ளது. ஐந்தாவது வகுப்பு மாணவனால், இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியவில்லை. குழந்தைகள் இறப்பு விகிதம் மிக அதிகமாக உள்ளது. இந்த துறைகளில் நாம் முன்னேற இந்த ஐந்து மாநிலங்களில் மிகப் பெரிய மாற்றம் தேவையாய் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 1. உத்தரப் பிரதேசம் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. லக்னோ இம்மாநிலத்தின் தலைநகராகும். அலகாபாத், கான்பூர், வாரணாசி, ஆக்ரா ஆகியவை மற்ற தலையாய நகரங்கள். ஹிந்தி, உருது ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். பாஜக கட்சி ஆட்சியில், ஆதித்தநாத் முதல்வராக இருக்கிறார். பொறுப்பற்ற மருத்துவ மனை நிருவாகத்தால், குழந்தைகள் மரணத்தில், இந்தியாவில் முதலிடம் பெற்ற மாநிலமாக இருக்கிறது. 2. பீஹார் மாநிலம் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சியில் நிதிசுகுமார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் ஹிந்தி உருது மொழியோடு மைதிலி மொழியும் பேசப்படுகிறது. 3. சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவின் ஆட்சியில் இராமன்சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில சத்தீஸ்கரி மொழியோடு ஹிந்தியும் பேசப் படுகிறது. 4. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் சிவராஜ்சிங்சௌகாண் முதல்வராக உள்ளார். 5. இராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் வசுந்ரா ரஜே சிந்தியா முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில் தான் தார்பாலைவனம் உள்ளது. இராஜஸ்தானி, மார்வாரி, பஞ்சாபி, உருது ஆகிய மொழிகள் பேசப் படுகின்றன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,767.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



