Show all

மெரினாவில் போராட! தொடக்கம் அசத்தலாத்தான் இருக்கு தீர்ப்பு எப்படி வருமோ தெரியலையே!

11,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மெரினா கடற்கரையில் போராட அனுமதி அளிக்க முடியாது என்று அரசு உயர்அறங்கூற்றுமன்றத்தில் திட்டவட்டமாக கூறிய நிலையில் காவிரியை விட மெரினா தான் அரசுக்கு முக்கியமா என்று அறங்கூற்றுவர் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 90 நாட்கள் உண்ணாநிலை இருக்க அனுமதிக்க வேண்டும் என்று தென்இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர் ராஜா முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு அறங்கூற்றுவர் ராஜா அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டிருந்தார். கடைசியாக எப்போது மெரினாவில் போராட அனுமதி அளிக்கப்பட்டது? ஏன் அரசு போராட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே அணியமாகி கடைசியாக சல்லிக்கட்டு போராட்டத்திற்குத் தான் மெரினாவில் அனுமதி அளிக்கப்பட்டது, அதற்குப் பின்னர் எந்த போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார். சென்னையைப் பொறுத்தவரை அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதியளிக்க முடியும், மெரினாவில் நிச்சயம் போராட அனுமதிக்க முடியாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் திட்டவட்டமாகக் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அறங்கூற்றுவர் ராஜா, காவிரியைவிட மெரினா கடற்கரை மிகவும் முதன்மையா என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அதுமட்டுமின்றி வைகுண்டஏகாதசி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற விழாக்களின் போது லட்சக்கணக்கான மக்கள் கோயில், தேவாலயங்களில் கூடுவார்கள் அந்தப் விழாக்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்று விழா கொண்டாடக் கூடாது என்று உத்தரவிடுவீர்களா என்று அறங்கூற்றுவர் கேட்டுள்ளார். மக்களின் போராட்டத்தை தடுக்கும் உரிமை அரசுக்கு இல்லை, போராட்டத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே அரசுக்கு அனுமதி உள்ளது என்று கூறி வழக்கின் தீர்ப்பை அறங்கூற்றுவர் நாளைக்கு ஒத்திவைத்துள்ளார்.

தொடக்கம் எல்லாம் அசத்தலாத்தான் இருக்கு; தீர்ப்பு நாளைக்கு எப்படி வருதுன்னு பார்ப்போம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,767.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.