மன்மோகன்சிங் எச்சரிக்கை: பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியா இன்னும் மீளவில்லை. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரக்கூடிய சூழ்நிலையிலிருந்தும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது 16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பணமதிப்பிழப்பு தொட்டு, தற்போது இந்தியா எதிர்கொண்டிருக்கிற பொருளாதார நெருகடிகள் வரை மோடிக்கு எதிரான எதிர்க்கட்சியின் வலுவான குரல்களில் ஒன்றாக மன்மோகன் சிங் களம்; இறங்கியுள்ளார். மன்மோகன்சிங் ஞாயிற்றுக்கிழமை பாஜக தலைமையிலான இந்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இந்தியாவின் பொருளாதார மந்தநிலை குறித்து பாஜக அரசு மீது பல குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள மன்மோகன் சிங், ‘நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5விழுக்காடகக் குறைந்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருளாதார வீழ்ச்சியை இந்தியாவால் தாங்கிக்கொள்ள முடியாது. பழிவாங்கும் அரசியலை விட்டு விட்டு மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாட்டைக் காப்பாற்றும்படி இந்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். உற்பத்தித் துறையின் வளர்ச்சி 0.6விழுக்காடாக இருப்பது வருத்தமளிக்கிறது. இதற்குப் பண மதிப்பிழப்பு, சரக்கு-சேவைவரி போன்ற மோடி அரசின் தவறான அமலாக்கமே காரணம். அதனால் பொருளாதார நெருக்கடிகளில் இந்தியா மேலும் மேலும் ஆழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரக்கூடிய சூழ்நிலையிலிருந்தும் மோடி அரசின் தவறான கொள்கைகளால் வளர்ச்சி குறைந்துள்ளது. ஒரே காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாகக் குறைந்திருப்பது நீண்டகாலப் பொருளாதார மந்தநிலைக்கு நடுவே நாம் இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. பொருளாதார மந்தநிலையால் சொகுசு ஊர்திகள் போன்ற பொருள்கள் வாங்கும் மக்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்’ போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தலைமைஅமைச்சர் மோடி தலைமையிலான அரசாங்கத்தை மன்மோகன் சிங் பலவிதமான பிரச்சனைகள் குறித்து விமர்சித்துள்ளார், இந்தாண்டின் தொடக்கத்தில் கருத்து தெரிவித்த மன்மோகன் சிங், ‘மோடி அரசாங்கத்தின் கொள்கைகள் வேலை வாய்ப்பு வளர்ச்சியை குறைக்கின்றது. ஊர்திகள் துறையில் மட்டும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைகள் இழக்கப்பட்டுள்ளன. முறைசாரா துறையில் இதேபோல் பெரிய அளவிலான வேலை இழப்புகள் இருக்கும், இது தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும்.’ என்றார். உழவர்கள் போராட்டம் குறித்து பேசிய மன்மோகன் சிங், “உழவர்களின் தற்கொலைகள் மற்றும் உழவர்களின் போராட்டம் ஆகியவை நமது பொருளாதாரத்தின் கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கின்றன” என்றார். மேலும், “புவிசார் அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகளாவிய வர்த்தகத்தில் எழுந்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்தி இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரிக்க முடியவில்லை. இதுதான் மோடி அரசாங்கத்தின் கீழ் பொருளாதார நிர்வாகத்தின் தற்போதைய நிலை.” என்றார். “இந்தியாவின் இளைஞர்கள், உழவர்கள், தொழில்முனைவோர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இதைவிட சிறந்த வாய்ப்புக்கு தகுதியானவர்கள். இந்தப் பாதையில் இந்தியாவால் இனியும் தொடர முடியாது. எனவே, மனிதனால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியிலிருந்து நமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, பழிவாங்கல் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைத்து விவேகமான குரல்கள் மற்றும் சிந்தனைகளைப் பெறுமாறு நான் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறேன்” என்றார். சரக்கு-சேவைவரி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்து பேசிய மன்மோகன் சிங், “மக்கள் தற்போது மோடி அரசின் பொருளாதார மேலாண்மை மீதும் வங்கி செயல்பாடு மீதும் நம்பிக்கை இழந்து வருகின்றனர். தற்போது பல மாநிலங்களில் ரூபாய் தாள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தத் தட்டுப்பாடு தவிர்க்கபட வேண்டியதாகும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,263.
கச்சா எண்ணெயின் அளவு சர்வதேச அளவில் குறைந்துள்ளது. ஆயினும் காரணம் இன்றி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படுவது தொடர்கிறது. மோடி செய்த இரு மாபெரும் தவறுகளால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவை ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் சரக்கு-சேவைவரி அமுலாக்கம் ஆகிய இரண்டுமே ஆகும். இந்த மாபெரும் தவறுகளை மோடி தவிர்த்திருக்க வேண்டும். இதனால் நமக்கு கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுளது. இதனால் நமது சிறு குறு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்துள்ளனர்” என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.