சீனப் பொருளை வாங்க கூடாது. என்று கீச்சுப் பதிவிட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள எச்.இராசாவிற்கு, சீனத்தயாரிப்பான படேல் சிலை திருப்பி அனுப்பப்படுமா? என்று கேள்வி எழுப்பி, இணைய ஆர்வலர்கள் எச்.இராசாவை எள்ளி நகையாடியுள்ளனர். 03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: சீனப் பொருட்களை நாம் இனிமேல் பயன்படுத்தக்கூடாது என்று எச்.இராசா கீச்சு பதிவிட்டுள்ளார். இதற்கு, ‘சீனாவிடம் கொடுத்து சர்தார் வல்லபாய் சிலை செய்ய சொன்னது மோடி தானே? அதை இந்தியாவில் செய்து இருக்க முடியாதா? சீனாவால் செய்து தரப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை சீனாவிற்கே அனுப்பப்படுமா? நம் பணம் நமக்கு திரும்ப கிடைக்குமா? என்று இணைய ஆர்வலர்கள் எச்.இராசாவிடம் கேள்விகளை எழுப்பி கொண்டிருப்பது இணையத்தில் இன்றைய தலைப்பாகி வருகிறது. இந்தியா மற்றும் சீனா எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற இடத்தில் இராணுவ வீரர்களுக்கு இடையிலாக ஏற்பட்ட மோதல் பதட்டத்தை அளித்து வருகிறது. இந்தியா தரப்பில் தமிழ் மாவீரன் பழனி வீர மரணம் அடைந்தது தமிழ்நாட்டு மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அதேபோல சீன தரப்பிலும் 43 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இதைப் பற்றி சீனா அதிகாரப்பாடான தகவல் எதையும் தெரிவிக்கவில்லை. இருந்தாலும், இந்தியாவைவிட அதிக உயிரிழப்புகள் தங்களுக்குதான் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. சீனாவின் வணிகச் சந்தையாக இந்தியா உள்ளது. மோடி நிறுவிய மாஉயரச் சிலையான படேல் சிலையும் சீனத்தயாரிப்புதான். சீனா, இந்தியாவிடம் எவ்வளவோ ஆதாயங்களை அனுபவித்து வருகிறது. அப்படி இருந்தும் தேவையில்லாமல் இந்தியாவை பகைத்து கொண்டு வருவதில் இந்திய மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இந்தக் கொடுநிகழ்வுக்கு இராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் நோக்கர்கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதேபோல, சீன பொருட்களை இனிமேல் நாம் வாங்க கூடாது என்றும் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜகவின் எச்.இராசாவும் சீனப் பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று கீச்சுப் பதிவிட்டுள்ளார். ஆனால் அவரை இரட்டை வேடதாரியாகப் பார்க்கிறார்கள் இணைய ஆர்வலர்கள். ரூபாய் 2,989 கோடி சீனாவிடம் கொடுத்து சர்தார் வல்லபாய் சிலை செய்ய சொன்னது மோடி தானே? அதை மேக் இன் இந்தியாவில் செய்து இருக்க முடியாதா? சீனாவால் தயாரிக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலை சீனாவிற்கே திருப்பி அனுப்பப்படுமா? நம் பணம் நமக்குத் திரும்ப கிடைக்குமா" என்று கேள்விகளை எழுப்பி தலைப்பாக்கி வருகின்றனர் இணைய ஆர்வலர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



