தமிழகத்தில் சிற்சில ஊரின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் மாற்றம் செய்து வெளியிட்ட அரசாணையை தமிழ்நாடு அரசு திருமப் பெற்றுள்ளதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 04,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்நாடு அரசு அண்மையில் ஒரு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில், ஒரு ஊரின் பெயரை எப்படி ஒலிக்கிறோமோ அப்படியே ஆங்கிலத்திலும் அதை எழுத வேண்டும் என்பதற்காக இந்த அரசாணை வெளியிடப்பட்டது. எடுத்துக்காட்டாக திண்டுக்கல் என்பது ஆங்கிலேயர்களால் அப்போது DINDIGUL என எழுதப்பட்டது. ஆங்கிலப் பயன்பாட்டிற்கு நாமும் அவ்வாறே பயன்படுத்தி வந்திருந்தோம். அதனை THINDUKKAL என மாற்ற வேண்டும் என அரசாணை பிறப்பித்திருந்தது. மொத்தம் 1018 ஊர்களின் பெயர்களை இதேபோல் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் எனவும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது. இந்த அரசாணையை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்ததன. இருப்பினும் தமிழக அரசின் இந்த முயற்சி முதல் கட்ட நடவடிக்கை என்கிற அளவில் பொதுவாக வரவேற்பைப் பெற்றது. அதேநேரத்தில் பல ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுவதில் குழப்பங்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக Coimbatore என்பதை Koyampuththoor என எழுத வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் நாங்கள் இதனை பின்பற்றப் போவதில்லை என ஒருதரப்பு சமூக வலைதளங்களில் கருத்துப்பரப்புதல் செய்தது சர்ச்சையானது. இந்த நிலையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமது கீச்சுப் பக்கத்தில், தமிழக அரசின் இந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டும் வருகிறது. புதிய அரசாணையானது அடுத்த 2 அல்லது 3 நாட்களில் வெளியிடப்பட உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



