Show all

செவ்வாய் முதல் பயணிகள் தொடர்வண்டிகள் இயங்கும்! முதல் கட்டமாக இரு வழியாக 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும்: தொடர்வண்டித்துறை அறிவிப்பு

நாளை செவ்வாயக் கிழமை முதல் பயணிகள் தொடர்வண்டிகள் இயங்கும் எனவும், முதல் கட்டமாக இரு வழியாக 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும் எனவும் இந்தியத் தொடர்வண்டித்துறை அறிவித்துள்ளது.

28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக தொடர்வண்டி, பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்தும் முற்றிலும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க் கிழமை முதல் பயணிகள் தொடர்வண்டிப் போக்குவரத்து படிப்படியாகத் தொடக்கப்படும் என்று இந்தியன் தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது.  முதற்கட்டமாக நாளை முதல், நாட்டில் உள்ள முதன்மை நகரங்களுக்கு 15 தொடர்வண்டிகள் இயக்கப்படும். இந்த தொடர்வண்டிகள் மீண்டும் மறு வழியாகவும் இயக்கப்படும் எனவும் தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தொடர்வண்டித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தொடர்வண்டி நிலையங்களில் பயணச்சீட்டு வழங்குமிடங்கள் திறக்கப்படாது . இயங்கலை மூலமாகவே பயணச்சீட்டு பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே தொடர்வண்டி நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாமலும் முகமூடி அணிந்து கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பயணச்சீட்டு முன்பதிவு தொடர்வண்டித்துறை இணையதளத்தில் திங்கட்கிழமை மாலை 4 மணி முதல் தொடங்கும். 

புதுடெல்லி தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அசாம், பெங்கல், பீகார், சத்தீஷ்கர், குஜராத், ஜம்மு, ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மராட்டியம், ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில் 15 தொடர்வண்டிகள் மட்டும் இயக்கப்படும். பயணிகள் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.  தொடர்வண்டிப் பெட்டிகள் இருப்பை பொருத்து கூடுதல் தொடர்வண்டிகள் இயக்கப்படும். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடர்வண்டிப் பெட்டிகள் கொரோனா தனிமை பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன என்று தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.