உண்மையான வேளாண் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அரசு கலந்துரையாடலைத் தொடர்வதற்கு தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது என ஒன்றிய பாஜக அமைச்சர் பெருமகனார் தோமர் தெரிவித்தார். 01,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள, குறிப்பிட்ட சில கார்ப்பரேட்டுகளுக்கு பலனளிக்கும் 3 வேளாண் சட்டங்கள், உழவர்களின் நலன்களுக்கு எதிரானவை என தெரிவித்து, அவற்றை திரும்பப்பெற வேண்டும் என்று வட மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இதில், சுமார் 40 வேளாண் அமைப்புகளைச் சேர்ந்த உழவர்கள், 20 நாட்களைக் கடந்து டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த இருபது நாளாகவே பாஜக கடுமையாக உழைத்து கண்டுபிடித்த மாபெரும் உண்மை- இவர்கள் எல்லாம் உண்மையான வேளாண் அமைப்பினர் அல்லர் என்பதுதான். இந்தக் கண்டு பிடிப்பு முயற்சியில், இந்த நாற்பது அமைப்புகளைச் சாராத, பாரதீய கிசான் யூனியன் என்ற அமைப்பினருக்கு உண்மையான வேளாண் அமைப்பு என்று அங்கீகாரம் கொடுத்து நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார் அமைச்சர் தோமர். மேலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டங்களுக்கு ஆதரவு இருக்கிறது. மேலும், உண்மையான வேளாண் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுடன் அரசு கலந்துரையாடலைத் தொடர்வதற்கு தயாராக உள்ளது. திறந்த மனதுடன் தீர்வு காண்பதற்கும் தயாராக இருக்கிறது எனவும் அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



