Show all

இந்திய வரலாற்று ஆவணமாகப் போகிறதா கமல் தலைமைஅமைச்சருக்கு எழுதிய மடல்! 2நாட்களுக்குப்பிறகு தூசுத்தட்டப் பட்டு இந்தியாவின் தலைப்பாகிறது

பேரறிஞர் அண்ணா அவர்களின் பட்டமளிப்பு விழா பேருரை தமிழகத்தின் வரலாற்று ஆவணமாகிய சிறப்பு மிக்கது. அதில் அவரின் முடிப்பு என்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கும் வைரவரிகள். கமல் தலைமைஅமைச்சருக்கு எழுதிய மடல் 2நாட்களுக்குப்பிறகு தூசுத்தட்டப் பட்டு இந்தியாவின் தலைப்பாகி வருவது அண்ணாவின் அந்த வரலாற்று ஆவணத்தை நினைவில் கொண்டுவருவதாக அமைகிறது.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பேரறிஞர் அண்ணா அவர்கள் மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய பட்டமளிப்பு விழா பேருரை தமிழகத்தின் வரலாற்று ஆவணமாகிய சிறப்பு மிக்கது. அதில் அவரின் முடிப்பு என்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கும் வைரவரிகள்.

தமிழ் உமது முரசமாகட்டும், பண்பாடு உமது கவசமாகட்டும், அறிவு உமது படைக்கலனாகட்டும், அறநெறி உமது வழித்துணை ஆகட்டும், உறுதியுடன் செல்வீர், ஊக்கமுடன் பணிபுரிவீர், ஏற்றமிகு வெற்றியினை ஈட்டிடுவீர், பாட்டு மொழியுடைய நம் தாயகம் வாழ தரணிக்குத் துணை நிற்கும் தகுதிபெறச் சென்றிடுவீர், வென்றிடுவீர் என்று முடித்திருப்பார் உரையை.

அன்னக்கிளி திரைப்படம் தொடக்கித்தில் யாரும் பெரிதாக போற்றிக் கொள்ளாத இயல்பான படமாக இருந்து பின்பு சில நாட்களில் ஒட்டுமொத்தத் தமிழகத்தாலே போற்றப்பட்டு இந்தியத் திரையுலக வரலாற்றில் தமிழ்த்திரையுலகை உச்சாணிக் கொம்பிற்கு உயர்த்திய வரலாற்று ஆவணம் அந்தப்படம்.

இந்த வரிசையில்- கொரோனாவிற்கு எதிரான நடுவண் அரசின் செயல்பாட்டை மிகத் துணிச்சலாக விமர்சனம் செய்ததன் மூலம் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தேசிய அளவில் தலைப்பாகியுள்ளார். 

இந்தியா முழுக்க மருத்துவர்களும், நலங்கு அதிகாரிகளும் மிக தீவிரமாக கொரோனாவிற்கு எதிராக பணியாற்றி வருகிறார்கள். கொரோனா பரவலுக்கு எதிராக செயலாற்றும் வகையில் இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 

கொரோனாவிற்கு எதிராக எல்லோரும் இப்படி போராடி வரும் நிலையில் அவ்வப்போது தலைமைஅமைச்சர் மோடி சில அறிவிப்புகளை வெளியிட்டு விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். எடுத்துக்காட்டாக மக்களுக்கு போதிய அவகாசம் கொடுக்காமல் ஊரடங்கை அறிவித்தது, மக்களை கைதட்ட சொன்னதன் மூலம் பலர் கூட்டமாக வெளியே கூடியது, மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் நேரத்தில் எல்லோரையும் வீட்டிற்கு மேலே வந்து விளக்கு ஏற்ற சொன்னது என்று பல உத்தரவுகள் விமர்சனங்களை சந்தித்தது. டெல்லியில் இருந்து வெளியூர் பணியாளர்கள் வெளியேறியது. கொரோனாவிற்கு எதிராக போதிய கால அவகாசம் இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது என்று பல விசயங்கள் இதில் நடுவண் அரசு மீது விமர்சனங்களாக வைக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் பலர் இந்த விமர்சனத்தை வைத்து வருகிறார்கள். 

ஆனால் நடுவண் அரசின் இது போன்ற அறிவிப்புகளை எதிர்கட்சித் தலைவர்கள் பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. காங்கிரஸ் தலைவர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், திமுக கூட இதை பெரிய அளவில் விமர்சனம் செய்யவில்லை. டெல்லியில் மக்கள் கூட்டம் கூட்டமாக அகதிகளாக சென்றார்கள். இதை பயன்படுத்தி மக்களை தங்கள் பக்கம் திரட்ட வாய்ப்பு இருந்தும் கூட அதை காங்கிரஸ் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

ஆனால் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மட்டும் இதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார். நேற்று தலைமைஅமைச்சர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதிய கடிதம், சமூக வலைதளங்களில் பெரிய பேச்சாக இருந்து வருகிறது. அவர் தனது கடிதத்தில், இந்த ஊரடங்கு உத்தரவை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செய்தது போலவே எந்த விதமான திட்டமிடலும் இல்லாமல் செய்துள்ளீர்கள். நீங்கள் தவறு செய்துவிட்டீர்கள் என்பதை காலம் அன்றாடம் எனக்கு உணர்த்துகிறது. நீங்கள் சொல்வதை செய்கிறார்கள் என்பதால் மக்கள் உங்களுக்கு அடிமை என்று நினைக்க கூடாது. நாங்கள் அடிமை இல்லை நீங்கள் பணக்காரர்களை கைதட்ட வைக்கிறீர்கள், விளக்கு ஏற்ற வைக்கிறார்கள். ஆனால் அங்கே ஏழைகளின் வாழ்க்கை நிர்கதியாகி உள்ளது. பால்கனியில் எண்ணெய் விளக்குகள் எரிந்துகொண்டிருக்கும்போது, ஏழைகள் உணவு இன்றி சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உங்கள் அரசு ஒரு பால்கனி அரசு போல மாறிவிட்டது. பால்கனியில் இருப்பவர்களை பற்றி யோசிக்கும் இந்த அரசு, தலைக்கு மேலே கூரையே இல்லாமல் இருக்கும் மக்கள் குறித்தும் யோசிக்க வேண்டும். நீங்கள் செய்த தவறு இது. இந்தச் சிக்கலுக்குச் சாதாரண மக்களை குறை சொல்ல முடியாது. நீங்கள்தான் இதற்கு காரணம். இந்தியாவிற்காக அல்லும் பகலும் அயராமல் உழைக்கும் அறிவாளிகளை நீங்கள் காக்கவில்லை. அறிவாளிகள் என்று கூறியது உங்களுக்கு பிடித்து இருக்காது. உங்களுக்கும், அரசுக்கும் அது பிடிக்காத வார்த்தை. நான் பெரியாரையும் காந்தியையும் பின் தொடர்பவன். அவர்கள் எல்லோரும் அறிவாளிகள், என்று கமல்ஹாசன் மிக காட்டமாக இந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். 

நாடு முழுக்க கை தட்டுவதையும், விளக்கு ஏற்றுவதையும் விமர்சனம் செய்ய அரசியல்வாதிகள் அச்சப்பட்டு உள்ளார். ஆனால் எந்த விதமான அச்சமும் இன்றி, பாஜகவின் இயங்கலை படைபலத்திற்கு பயமின்றி மிக துணிச்சலாக கமல்ஹாசன் இதை பேசி உள்ளார். இதன் மூலம் வரும் பின் விளைவுகளை தெரிந்தே பேசி உள்ளார். 

தனது திரையுலகிலேயே பலர் அரசின் இந்த செயலை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போது, பேச வேண்டியதை சரியான நேரத்தில் சொல்லி இருக்கிறார். இந்த கடிதத்தில் கமல்ஹாசனிடம் இருக்கும் வெளிப்படைத்தன்மைதான் கவனம் ஈர்த்து உள்ளது. திமுகவிடம் இருந்து வர வேண்டிய கடிதம் ஒன்று கமல்ஹாசனிடம் இருந்து வந்துள்ளது. பல நாள் கோபம் கமல்ஹாசன் மிக சரியான நேரத்தில் இப்படி பேசி இருக்கிறார் என்று அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

அரசை எதிர்க்க பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் கூட பயப்படுகிறார்கள். மமதா பானர்ஜி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஸ்டாலின் ஆகியோர் கூட நடுவண் பாஜக அரசின் செயல்களை பெரிதாக கேள்வி கேட்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் மிக கடுமையாக அரசை நேர்மையாக கேள்வி கேட்டு இருக்கிறார். மக்களின் குரல் இதுதான் இது அவரின் மனதிற்குள் பல நாட்களாக இருந்த குரல் என்று கூட கூறலாம். பல நாட்களாக அடைத்து வைத்து இருந்த விசயங்களை நான் பெரியாரின் பின் தொடர்பாளர் என்று அதிரடியாக பேசி உள்ளார். 

அதோடு சமூக வலைதளங்களில் மக்களின் குரலை கவனித்து அதை தலைமைஅமைச்சரிடம் அழுத்தமாக கமல்ஹாசன் வெளிப்படுத்தி உள்ளார். மக்கள் பேசுவதை கடிதமாக எழுதி உள்ளார். மற்ற அரசியல் தலைவர்கள் எங்கே தவறினார்களோ அங்கே தனது தடத்தை கமல்ஹாசன் பதித்து இருக்கிறார். 

இதன் மூலம் தேசிய அளவில் கமல்ஹாசனின் அரசியல் பார்வை முதல் முறை கவனம் பெற்றுள்ளது. தன்னுடைய கொள்கை இதுதான் என்று கமல்ஹாசன் முதல் முறை தனது கடிதம் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். இதே வேகத்தில் அவர் செயல்பட்டால் கண்டிப்பாக தேசிய அளவில் அவர் பக்கம் கவனம் திரும்பும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை. செயலலிதா அவர்கள் தன் இறுதிநாட்களில் முயன்ற இந்திய இலக்கை தொட்டு, கமல்ஹாசன் இந்திய அளவில் தடம் பதிப்பார். இது ஒரு இனமே நடக்கும் வரலாற்றுப்பாதை.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.