Show all

கொரோனா அரசியல்தான்- ஸ்டாலின் சரமாரிக் கேள்வி! பாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ.510 கோடிதானா?

நடுவண் அரசு அறிவித்த ஊரடங்குக்கு மக்கள் பெரியவிலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிற நிலையில், நிவாரணம் தரவேண்டிய நடுவண் அரசு- பாராளுமன்ற உறுப்பினர் நிதியை ரத்து செய்வதா? தமிழகத்துக்கு ரூ.510 கோடிதானா? என்று சரமாரிக் கேள்வி எழுப்பியுள்ளார், ஸ்டாலின் அவர்கள். 

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடுவண் அரசின் கொரோனா அரசியலால்தான் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு வெறும் ரூ510 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:- மனிதகுல வரலாற்றின் மாபெரும் துயரம் என்று சொல்லக்கூடிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். சீனாவிலிருந்து பரவி, இன்றைய நாளில் உலகின் பல்வேறு நாடுகளிலும் புகுந்திருக்கும் கொரோனா எனப்படும் நுண்ணுயிரி நோயால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,789 ஆகிவிட்டது. 124 உயிர்களை இழந்துள்ளோம். 

தமிழகத்தைப் பொருத்தவரையில் 690 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளார்கள். 7 உயிர்களை இழந்திருக்கிறோம். இன்னும் இந்த எண்ணிக்கை எந்த அளவுக்கு இழுத்துச் செல்லுமோ, இழப்புகளும் இன்னல்களும் எத்தனை தூரம் நீளுமோ, என்ற பதட்டமும் துளியும் தணிந்தபாடில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று சீனாவிலிருந்து பரவிய காலத்திலேயே, அதாவது சனவரி மாதத் தொடக்கத்திலேயே, இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்குமானால், இந்தியாவுக்கு இத்தகைய மோசமான நிலைமை ஏற்பட்டு இருக்காது. மார்ச் மாதம் இரண்டாவது கிழமை வரைக்கும் நடுவண் அரசு காட்டிய அலட்சியம்தான் இந்த அவலமான சூழ்நிலைக்குக் காரணம் என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும்; அனைவரும் உணர்ந்துதான் ஆகவேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.