13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எலிக்கு பயந்து கூரையை எரித்த கதையாக, கறுப்புப் பணம், கள்ளரூபாய்தாள், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக என்று கொண்டுவரப்பட்ட, பணமதிப்பு நீக்கத்தின் போது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களில் 99.3 விழுக்காடு வங்கிகளுக்கு முறையாகத் திரும்பிவிட்டதாக ரிசர்வ் வங்கி இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மோடியின் அறிவீனமான பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், மிக, மிகக் குறைந்த அளவு பணம் மட்டுமே வெளியே சென்றுள்ளது. அதாவது முதல்கட்டமாக ரூ.5 லட்சம் கோடிக்கு கறுப்புப் பணம், கள்ளநோட்டு தடுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெறும் ரூ.10 ஆயிரத்து 720 கோடி மட்டுமே வரவில்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.1000, ரூ.500 தாள்களில் ரூ.15.41 லட்சம் கோடி பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் செல்லாத தாள்களைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 50 நாட்களில் அனைத்தும் சீரடைந்துவிடும் என்று மோடி தெரிவித்த நிலையில், நிலைமை சீரடைய ஒரு ஆண்டு தேவைப்பட்டது. செல்லாத ரூ.1000, ரூ.500 தாள்களுக்குப் பதிலாக ரிசர்வ் வங்கி புதிய ரூ.2000, ரூ.500 தாள்களை வெளியிட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில் எத்தனை லட்சம் கோடி செல்லாத ரூபாய் தாள்கள் வங்கிக்கு வந்துள்ளன என்பது குறித்த தெளிவான புள்ளிவிவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை. உச்ச அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்த பிரமாணப் பத்திரத்திலும் நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் முழுமையான தகவல்களைத் தெரிவிக்காமல், ரூபாய்தாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்று தெரிவித்து வந்தது. இந்நிலையில், 22 மாதங்களுக்குப் பின் செல்லாத ரூ.500, ரூ.1000 தாள்கள் எண்ணப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: 1. பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டுவரும்போது, நாட்டில் ரூ.500, ரூ.1000 தாள்கள் ரூ.15.41லட்சம் கோடிக்கு புழக்கத்தில் இருந்தன. அந்த தாள்கள் மக்களிடம் இருந்து திரும்பப் பெறப்பட்டு புதிய ரூ.500, ரூ.2000 தாள்கள் தரப்பட்டன. 2. செல்லாத ரூபாய் தாள்களை எண்ணும் பணி முற்றிலும் முடிந்துவிட்டநிலையில், ரூ.15.31 லட்சம் கோடி பணம் வங்கி முறைக்குத் திரும்ப வந்துவிட்டன. 3. வங்கி முறைக்கு மிக, மிகக் குறைந்த அளவாக ரூ.10 ஆயிரத்து 720 கோடி பணம் மட்டுமே திரும்பி வரவில்லை. 4. பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் வங்கிக்கு வந்த செல்லாத ரூ.500, ரூ1000 தாள்கள் வங்கியில் தீவிர ஆய்வுக்குப் பின்புதான் வைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டன, வழக்குத்துக்கு மாறாக அதிக அளவு வைப்பு செய்யப்பட்ட பணம் வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. 5. மிகப்பெரிய பணியாகக் கருதப்பட்ட செல்லாத ரூபாய் தாள்களை ஆய்வு செய்தல், சரிபார்த்தல் பணி எண்ணுதல், உண்மைத்தன்மை கண்டறிதல் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடிந்துவிட்டன. 6. புதிய ரூ.500, ரூ.2000 தாள்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி கூடுதலாக ரூ.7 ஆயிரத்து 965 கோடி செலவிட்டுள்ளது. 7. இது வழக்கமாகச் செலவிடப்படும், முந்தைய ஆண்டில் செலவிட்ட தொகையான ரூ.3 ஆயிரத்து 421 கோடியைக் காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாகும். 8. மேலும் சில புதிய ரூபாய் தாள்களை அச்சடிக்க ரூ.4 ஆயிரத்து 912 கோடி செலவிடப்பட்டுள்ளது. 9. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், ரூ.100 தாள்களில் கள்ள தாள்கள் எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது. ரூ.50 தாள்களில் போலியானவை 154.3 விழுக்காடு கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



