13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசினால் தமிழர் பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று மாபெரும் பேரணி நடைபெற்றது. தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தும், அபகரித்தும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கு எதிரான போராட்டத்திற்கு மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. இப்போராட்டத்திற்கு தமிழ் அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்திருந்தன. மேற்படி பேரவையின் ஏற்பாட்டில் பேரணியும் எதிர்ப்பு போராட்டக் கூட்டமும் கரைத்துரைப்பற்று விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இப்போராட்டத்தையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நகர வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டி அங்குள்ள மக்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். நகர வீதியூடான பேரணியின் போது எமது நிலம் எமக்கு வேண்டும், மகாவலி திட்டமோ குடியேற்றமோ எமக்கு வேண்டாம். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்து, பறிக்காதே பறிக்காதே எமது நிலத்தை எம்மிடமிருந்து பறிக்காதே, நல்லாட்சியே நாசகார வேலை செய்யாதே போன்ற பல்வேறு முழக்கங்களைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் எழுப்பியிருந்தனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



