Show all

சுங்கச் சாவடி படுத்தும் பாடு! அறங்கூற்றுவரையே அல்லல் படுத்திய கதை

சுங்கம் தவிர்த்த சோழன், என்று பழைய தமிழக வரலாற்றைப் படிக்கும் தமிழ்மக்களுக்கு, சுங்கச்சாவடியில் விரைவுக்கட்டு அட்டையை முன்னெடுத்து, சாலைப் பேணுதலுக்கு எல்லாம் சுங்கம் விதிக்கும், பாஜக ஆட்சிஅதிகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான், ஒன்றியத்தில் ஆளும் பாஜகவை நோட்டாவிற்கு கீழே வைத்திருக்கின்றனர் தமிழ்மக்கள்.

03,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: சாலை போடுவதற்கு அரசு பாதிபணத்தைக் கொடுத்து விட்டு, மீதி பணத்தைச் சாலைபோட்ட நிறுவனங்கள், அந்தச் சாலையில் செல்வோர்களிடம் வசூலித்துக் கொள்ளும் வகைக்காக உருவாக்கப்பட்டவைகள்தாம் இந்தியா நெடுஞ்சாலைகளில் அமைந்திருக்கும் நூற்றுக்கணக்கான சுங்கச் சாவடிகள். எல்லாச் சாலைகளிலும் சாலை போட்ட நிறுவனங்கள் தங்களுக்குச் சேரவேண்டிய ஒப்பந்தத் தொகைக்குப் பலமடங்கு பெற்று விட்ட நிலையிலும் சுங்கம் வசூலித்து கொண்டிருப்பதான குற்றச்சாட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் தற்போது ஒன்றிய பாஜக அரசு, ஒற்றைத்துவம் ஆக்கல் என்கிற தங்கள் கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில், மாநில அரசுகளிடம் இருந்த வரிவாங்கும் அதிகாரம்- சரக்கு சேவை வரி என்ற தலைப்பில் பிடுங்கிக் கொள்ளப்பட்டது போல, இந்தியாவின் அனைத்து சுங்கச்சாவடிகளில் வசூலாகும் தொகையைத் தங்கள் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளும் வகைக்கு விரைவுக்கட்டு அட்டை (பாஸ்டேக்) என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது. 

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பகல் கொள்ளை என வர்ணித்து வந்தனர். இதே கருத்தைக் கொண்டிருக்கும் பலர் விருப்பம் இல்லையென்றாலும் சுங்கச்சாவடிகளுக்கான கட்டணத்தைச் செலுத்தி வந்தனர். குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வேறு வழியின்றி ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகளைக் கடக்கையில் அதற்கான கட்டணத்தை செலுத்தி வந்தனர். 

எல்லாச் சாலைகளிலும், சாலை போட்ட நிறுவனங்கள் தங்களுக்குச் சேரவேண்டிய ஒப்பந்தத் தொகைக்குப் பலமடங்கு பெற்று விட்ட நிலையிலும் சுங்கம் வசூலித்து கொண்டிருப்பதான குற்றச்சாட்டை இனி ஓட்ட முடியாமல், அந்தத் தொகை சலைபேணுதல் வகைக்கானது என்று தலைப்பு மற்றப்பட்டு நேரடியாக ஒன்றிய பாஜக அரசின் கணக்கில் வரவாகிறது. இனி சலைபோட்ட நிறுவனங்களுக்கு சிறு தொகையை ஒன்றிய அரசு வழங்கிக் கொள்ளும். 

இக்கட்டணத்தில் இருந்து விலக்கு பெற- அரசியல், அதிகாரம், சமூகம், கட்சிகள், ஊடகங்கள் என பற்பல பேரறிமுகத் துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் அடையாள அட்டையை முன்பு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது ஒன்றிய பாஜக அரசின் விரைவுக்கட்டு அட்டை (பாஸ்டேக்) வசூல் நடைமுறை வழக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அந்த விலக்குகளுக்கு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விரைவுக்கட்டு பெரும்பாலும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பழைய அனுபவத்தில் பல பேரறிமுகங்கள் சுங்கம் செலுத்துவதில் அடையாள அட்டையைக் காட்டி விலக்குக் கேட்டு, கடும் வாக்குவாதங்களையும், சண்டைகளையும் சுங்க ஊழியர்களிடத்தில் மேற்கொள்வதையும் நம்மால் காண முடிகின்றது. 

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஓர் அறங்கூற்றுவர் சுங்க வசூலில் விலக்கு கேட்டு நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருக்க சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது பேசுபொருளாகி இருக்கிறது.

சுங்கச்சாவடி ஊழியர்களிடத்தில் தான் ஒரு கூடுதல் மாவட்ட அறங்கூற்றுவர் என்றும், தன்னைக் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மாருதி சுசுகி காரில் வந்தவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றது. 

கூடுதல் மாவட்ட அறங்கூற்றுவர் காருக்குள் அமர்ந்திருக்க, காரின் ஓட்டுநர் அவரது அடையாள அட்டையைக் காண்பிக்க, ‘இந்தப் பொறுப்பில் இருப்பவர்கள் இலவசமாக சுங்கத்தைக் கடக்க அனுமதி இல்லை’ என சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறியிருக்கின்றனர். இதற்கு சுங்க மேற்பார்வையாளரை வருமாறு அழைத்த மாவட்ட அறங்கூற்றுவர், அவரிடத்தில் சில மணி நேரம் வாதிட்டார். இருப்பினும், அவரும் அதே பதிலைக் கூற, இதெல்லாம் சரிபட்டு வராது என கூறி, மேலாளரை வருமாறு அவர் அழைத்தார். 

ஆனால், அவரும் முன்னதாக பணியாளர்கள் கூறிய அதே பதிலைக் கூறியிருக்கின்றார். உச்ச அறங்கூற்றுமன்றம் மற்றும் உயர்அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் மட்டுமே இலவசமாக கடக்க அனுமதி உண்டு. கூடுதல் மாவட்ட அறங்கூற்றுவர்கள் இலவசமாக கடக்க அனுமதி இல்லை என கூறினார். 

இதனால், கடுப்பான அறங்கூற்றுவர் அந்த சுங்கவழிக்கான ரூ. 80 கட்டணத்தைச் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டிருக்கின்றார். இந்த வாக்குவாதம் நீண்ட நேரம் ஏற்பட்டதால் அறங்கூற்றுவரின் காருக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த பிற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கின்றது. இருப்பினும், அவர் சுங்கவழிக்கான கட்டணத்தைச் செலுத்தியே அங்கிருந்து புறப்பட்டார். 

சுங்கம் தவிர்த்த சோழன் வரலாற்றை தமிழக வரலாறாகப் படித்துக் கொண்டிருக்கும் நாம்- அறங்கூற்றுவரைக் கூட அல்லல்படுத்தும், சாலை பேணுதலுக்கெல்லாம் சுங்கம் விதிக்கும், பாஜகவின் ஒன்றிய ஆட்சியில் தொல்லை அனுபவித்து வருகின்றோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.