Show all

இன்று ராஜீவ்காந்தி நினைவுநாள்!

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு நாள் இன்று. 

27 ஆண்டுகளாகியும் அவரை கொலைகளத்தில் பலிகடாவாக்கியது யார்யார் என்கிற சதிவலைக் கும்பலை அம்பலப் படுத்தவேயில்லை. அரசியலில் அ, ஆ தெரியாத அப்பாவியாக அரியணை ஏறியவர் தாம் நம்முடைய முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி. அவர் அரியணை ஏறியது முதல் அகால மரணம் அடைந்தது வரை,  உலகளாவிய தமிழர் விரோத சக்திகள் அவரை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சிக்கு நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார்கள். 

ஒன்று தமிழின ஒழிப்பு! 

இரண்டு பங்களா தேசத்திற்கு தனிநாடு வாங்கித் தந்ததைப் போல தமிழர்களுக்கென்று ஒரு நாடாக தமிழீழத்தை பெருமைக்காக வாங்கிக் கொடுத்து விடுகிற வாய்ப்பு காங்கிரசுக்கு இருப்பதால் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க காங்கிரஸ் ஒழிப்பு! 

காங்கிரஸ் இந்திராகாந்தி அவர்கள் தலையெடுப்புக்கு பின்பிருந்தே பார்ப்பனியக் கட்சி என்கிற அடையாளத்தை இழக்கத் தொடங்கி விட்டது. சோனியா மருமகள் வருகை மேலும் கடுமையான பின்னடைவு. பார்ப்பனிய நிர்வாக அமைப்புகள்- அம்மாவைப் போலவே, எம்ஜியார் அவர்கள் நிர்பந்தத்தோடு ஈழத்தமிழர் ஆதரவு நிலையில் இருந்த முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி அவர்களைப் பகடைகாயாக்கி இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சியிலும் வென்றன. அவர்கள் அடித்தது என்னவோ இரண்டு மாங்காய்கள் தான் என்றாலும் விழுந்தன கூடவே சில பிஞ்சுகளும். முள்ளி வாய்கால் ஈழ இறுதிப் போரில் தமிழின அழிப்புக்கு சம்பந்தம் இல்லாத சோனியா, ராகுல், பிரியங்கா, நம்ம கலைஞர் ஆகியோரும் ஈழ தமிழ் இன அழிப்பு பழிபாவத்திற்கு ஆட்களாகிப் போனார்கள்.  முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளாக சிறையில் இருக்கிற அப்பாவிகள் வெளியில் வந்தாலும் உண்மையான முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலைக்கான சதிவலை அம்பலப் பட்டு விடும் என்பதாலேயே பாஜக ஆட்சியிலும் விடுவிக்க மறுக்கப் படுகிறார்கள். இதில் சூத்திரதாரிகள் காங்கிரசோ, முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி, அவர் குடும்பத்தாரோ அல்லர். பாஜகவிற்கும் நெருக்கமான உலகளாவிய தமிழர் விரோத சக்திகளே; இந்திய ஆளமையைக் கையில் வைத்திருக்கிற ஆளுமை கும்பல்களே. முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியின் கொலைக்கு பலியாக கருவறுக்கப் பட்ட ஈழத்தமிழன அழிப்புக்கும், முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி அவர்கள் குடும்பத்தாருக்குமான நியாயம் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடித்துக் கழுவில் ஏற்றுவதில்தான் இருக்கிறது.

தமிழனப் பற்றாளரும், காங்கிரசுக்காரருமான திருச்சி வேலுச்சாமி அவர்கள் ஒற்றை மனித இராணுவமாக,  முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றத்தை துப்புத் துலக்க இன்று வரை போராடி வருகிறார். தூங்குகிறவனை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா? சதிகாரர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. 

கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்களின் 27.07.2017 நாளிட்ட மடல்:

நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்..

'ராஜீவ் படுகொலை தூக்கு கயிற்றில் நிஜம்' என்ற புத்தகத்தை ஏதேனும் கடையில் பார்த்தாலோ.. அல்லது பழைய புத்தக கடையில் கிடந்தாலோ கூட ஒரு நொடி கூட தாமதிக்காமல் வாங்கி விடுங்கள்.

ஏனெனில் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணம் அது. இந்தியாவின் முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தியை அரசியல் அதிகாரத்திற்காக திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அந்தப் பலியை தமிழினத்தின் மீது போட்டு, (முள்ளி வாய்காலில்) பெரும் இனப்படுகொலையை செய்து முடித்ததற்கு பின் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறது.

அந்த படுகொலை செய்த சூத்திரதாரி யார்.. என்ன பின்புலம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமானால் நீங்கள் பத்திரிகையாளர் ஏகலைவன் எழுத்தில் உருவான இந்த புத்தகத்தை படித்தே ஆக வேண்டும். (கூடவே நளினி பிரியங்கா சந்திப்பு புத்தகத்தையும் படித்துவிடுங்கள்..)

ஒருநாள் இரவு பதினொரு மணிக்கு இந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.. அதிகாலை மூன்று மணி வரை கடைசி பக்கத்தை படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.. ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. நாம் ஒரு பார்வையாளனாக அந்த இடத்தில் நிற்பதுபோல் எழுத்துநடை நம்மை கட்டிப்போடுகிறது.

வேலுசாமி அவர்களின் துணிச்சல் நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது. நாம காமெடி பீஸாக நினைக்கும் சு.சாமி எப்படிப்பட்ட சதிகாரர்.. என்பதை அந்த காலகட்டத்திலே அம்பலப்படுத்தி கூட்டம் போட்டு பேசியிருக்கிறார்.

அவர் இடத்தில் வேறொருவர் இருந்திருந்தால் பதவி சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் விலை போயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் விட உயிர் பயம்.. ஏனெனில் அவர் கை வைத்த இடம் அப்படிப்பட்டது.

இப்போதும் அவருக்கு வருத்தம் என்னவென்றால்.. சதிகாரர்கள் வெளியில் இருக்க, கால் நூற்றாண்டை கடந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள் விடுதலையாக முடியவில்லையே என்பதுதான்..

வேலுசாமி அவர்களுடன் ஏற்கனவே அறிமுகம் உண்டு.. அப்போதெல்லாம் அவரை ஒரு காங்கிரஸ்காரராக மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன்.

ஆனால் இந்தப் புத்தகத்தை படித்து முடித்தப்பிறகு அவர் மீது பெரும் மரியாதை வந்துவிட்டது. தமிழர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய.. கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான நபர் வேலுசாமி.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,794.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.