07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகத்தின் மிகப் பெரிய வணிக நகரமாக இங்கிலந்தின் மான்செஸ்டர் விளங்குவதால், தென்னிந்தியாவின் வணிகப் பெருமை மிகுந்த நகரம் கோவை என்பதைக் குறிப்பிட, கோவையைத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமையாக கொண்டாடி வருகிறோம். கோவை மாவட்டத்தில், 50 ஆயிரம் கடைசல் பணிமனைகள், 5 ஆயிரம் கணினி எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்கள் தயாரிப்பு பணிமனைகள், 560 மண்ணிரும்பு வார்ப்பு ஆலைகள், 3 ஆயிரம் நீரேற்று இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், 1,200க்கும் மேற்பட்ட ஆட்டுரல் தயாரிப்புத் தொழிற்சாலைகள், 640 தானி நிறுவனங்கள், 1,500க்கும் மேற்பட்ட துகிலியல் ஆலைகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் என எண்ணற்ற தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல், தரமும் வரலாற்று பிரசித்தியும் பெற்ற கல்வி நிறுவனங்கள், ஒட்டு மொத்த தமிழகத்திற்குமான ஒரே வேளாண்மைப் பல்கலைக்கழகம், உலகம் முழுவதும் உள்ள நோயாளர்களைக் ஈர்க்கும் தரமான மருத்துவமனைகள் என்று கல்வி மற்றும் தொழில்துறையில் முன்னணியில் உள்ள மாவட்டம் என்பதால், வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வேலை தேடி வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயிருக்கும். ஆனால்! சரக்கு-சேவை வரியும், மின்வெட்டும் கோவை தொழில்துறையை தலைகீழாக புரட்டி போட்டுவிட்டது. தொழில் நிறுவனங்களில் நாள் ஒன்றுக்கு 15 கோடி முதல் 25 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது. நீரேற்று இயந்திரத் தயாரிப்புத் துறையில் நாள் ஒன்றுக்கு 50 கோடி முதல் 60 கோடி வரை வர்த்தகம் நடந்தது. ஆனால், தற்போது, 5 கோடி முதல் 10 கோடி வரை மட்டுமே வர்த்தகம் நடக்கிறது. துகிலியல், நகை, ஆட்டுரல் என எல்லா துறைகளிலுமே 40 முதல் 60 விழுக்காடு வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த துகிலியல் வர்த்தகத்தில், மூன்றில் ஒரு பங்காக விளங்குகிறது. ஆண்டுக்கு 75 ஆயிரம் கோடி அளவுக்கு அந்நிய செலவாணி ஈட்டித்தருகிறது. கம்பீரமாக நடைபோட்டு வந்த துகிலியல் துறை கடந்த 10 ஆண்டாக நலிவடைந்து வருகிறது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பெரிய நுகர்வோராக துகிலியல்துறை உள்ளது. அதாவது, மின்வாரியத்துக்கு 45 விழுக்காடு வருவாய் துகிலியல்துறையிடம் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால், மின்வெட்டால் பல துகிலியல் ஆலைகளை மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. கோவை தொழிற்கூடங்கள் மூலம், நெசவாலை, நீரேற்று இயந்திரங்கள், மின்சுழட்டிகள், ஆட்டுரல், தானி, நடுவண் அரசின் தொடர்வண்டித் துறை, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தேவையான உதிரிபாகம் தயாரித்து கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் வதைபடுவதுடன், தற்போது முடங்கிப்போய்விட்டன. முன்பு மூன்;று முறைப்பணி இயக்கிய ஆலைகளில் தற்போது ஒரு முறைப்பணி கூட (8 மணி நேரம்) இயக்க முடியவில்லை. அந்த அளவுக்கு வேலைஆணைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தலையாயத்துவமாக சரக்கு-சேவை வரி, வேலைஆணை இழப்பு, மின்வெட்டு, மூலப்பொருள் விலை உயர்வு, வங்கி கடன் நெருக்கடி, ஆகியவற்றுக்கு நடுவண் மாநில அரசுகள் தீர்வு கண்டால் மட்டுமே கோவை தொழில்துறை பழைய நிலைக்கு திரும்பும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,794.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



