இந்தியாவில் கடந்த 7 ஆண்டுகளில் 657 புலிகள் இறந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மாறாக தமிகத்தில் 153 புலிகள் அதிகரித்துள்ளன. இன்று உலகப் புலிகள் நாளை யொட்டி வண்டலூர் பூங்காவில் சிறப்பு காணொளி இன்று வெளியிடப் படுகிறது. 13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று உலகப் புலிகள் நாள்! உலக புலிகள் பாதுகாப்பு நாளையொட்டி, வண்டலூர் பூங்காவில் புலிகள் குறித்த சிறப்பு காணொளி இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை, புலி, சிங்கம், பறவைகள், ஊர்வனவைகள் உள்ளிட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பேணப்பட்டு வருகின்றன. இதில், குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள வங்கப் புலிகள், வெள்ளைப் புலி என மொத்தம் 28 புலிகள் பேணப்படுகின்றன. உலக புலிகள் பாதுகாப்பு நாளையொட்டி, பூங்காவில் பராமரிக்கப்படும் 28 புலிகளின் பெயர்கள், அவற்றின் குணாதிசயம், உணவு முறை, அகவை மற்றும் புலிகளைப் பாதுகாக்க வேண்டியதன் தேவை உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய காணொளி இன்று வெளியிடப்பட உள்ளது. அனைத்து சமூக வலைதளங்களிலும் இந்த காணொளியைப் பார்வையிடலாம். பூங்காவில் புலிகளைப் பார்வையிடும் இடத்தில் அவை குறித்த தகவல்கள் அடங்கிய விளம்பரத் தட்டிகளும் வைக்கப்படும் என்றனர். இந்தியாவில் புலி இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்தம் 50 புலிகள் சரணாலயம் உள்ளன. தேசிய புலிகள் ஆணையம் சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கணக்கெடுப்பில் 1,411 புலிகள், ஒன்பது ஆண்டுகளுக்கு முந்தையக் கணக்கெடுப்பில், 1,706 புலிகள், ஐந்தாண்டுகளுக்கு முந்தையக் கணக்கெடுப்பில் 2,226 புலிகள் இருப்பது தெரியவந்தது. கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 657 புலிகள் இறந்துள்ளன. இதில், 313 புலி இயற்கையாகவும், வேட்டையாடுதல் காரணமாக 138 புலி, விபத்து, இனப்பெருக்க சண்டை உள்ளிட்ட காரணங்களினால் 35 புலி, கண்காணிப்பு கீழ் உள்ள பகுதிகளில் 87 புலிகள் என மொத்தம் 657 புலி இறந்துள்ளன. இதில், அதிகபட்சமாக மத்திய பிரேதசத்தில் 30, கர்நாடகாவில் 24, மகாராஷ்டிரா மற்றும் அசாம் மாநிலத்தில் தலா 18, தமிழகத்தில் 10 புலிகள் வேட்டையாடப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் புலிகள் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது. தேசிய புலிகள் ஆணையம் சார்பில் கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி, 13ஆண்டுகளுக்கு முன்பு 76 புலிகள் இருந்தன, ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 163 புலிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் புலிகள் எண்ணிக்கை 229 ஆக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,228.
வண்டலூர் பூங்காவில் பேணப்படும் 28 புலிகளில் அண்மையில் பிறந்த அரிய வகை 2 கரும்புலிக் குட்டிகளையும், ஒரு வெள்ளைப் புலிக் குட்டியையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும், இந்தக் குட்டிகளையும் இவற்றின் தாய் மற்றும் பூங்காவில் உள்ள மற்ற இரண்டு வங்கப் புலிகள் ஆகியவற்றை இயங்கலையில் பார்க்கவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.