Show all

நிலவில் நிலம் விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனம்! ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியுள்ள இந்தியர்!

நிலவில் கால்பதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாக பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் 5 ஏக்கர் நிலத்தை  140 அமெரிக்க டாலருக்கு நியூயார்க்கை தளமாகக் கொண்ட லூனார் சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ள ராஜீவ் பக்தி கூறினார்.  

13,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121:  நிலவின் தென்துருவப் பகுதிகளை ஆய்வு செய்வதற்காக இந்தியா தயாரித்த சந்திரயான்- 2 விண்கலம் கடந்த கிழமை அரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.  

இந்த இந்திய முயற்சியில் மகிழ்ச்சி அடைந்துள்ள, நிலவில்  5 ஏக்கர் இடம் வாங்கியுள்ள ராஜீவ் பக்தி, நிலவில் கால்பதிக்க தன்னால் முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாக கூறியுள்ளார்.  

ஹைதராபாத்தை சேர்ந்த சோதிடர் மற்றும் பங்குச் சந்தை நிபுணர் ராஜீவ் பக்தி, பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே நிலவில் ஐந்து ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறி தலைப்பு செய்தியானார். தற்போது சந்திரயான் -2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை அடுத்து மீண்டும் அவர் பேசு பொருளாக மாறியுள்ளார்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் 5 ஏக்கர் நிலத்தை  140 அமெரிக்க டாலருக்கு நியூயார்க்கை தளமாகக் கொண்ட லூனார் சொசைட்டி இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கியதாக ராஜீவ் பக்தி கூறினார்.  

தற்போது ராஜீவ் பக்தி, ‘சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்துகள். ஒர் இந்தியனாக பெருமை கொள்கிறேன். நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இன்னும் பத்தே ஆண்டுகளுக்குள்; வெற்றிகரமாக முடிக்கப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.  

மேலும் நான் ஏன் நிலவை பற்றி இவ்வளவு ஆர்வமாக இருக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. 16 ஆண்டுகளுக்கு முன் இணையதளத்தில் நிலாவில் இடம் விற்பனைக்கு இருக்கிறது என்ற ஒர் செய்தியை பார்த்து அதுகுறித்து நன்கு ஆராய்ச்சி செய்து, நிலவில் இடம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து  5 ஏக்கர் நிலத்தை வாங்கினேன் .  

நான் நிலவில் இடம் வாங்கியபோது, என்னுடைய சந்ததியினர் இதனால் பயனடைவார்கள் என நம்பினேன், தற்போது நானே எனது குடும்பத்தாருடன் நிலவுக்கு போக முடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

நிலவில் இடம் வாங்கியதில் எந்த ஒரு  சட்டவிரோதமும் இல்லை. இதனால் நான் பயனடையலாம் பயனடையாமலும் போகலாம். நான் நிலவில் இடம் வாங்கிய போது முதலில் அனைவரும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். என்னை முட்டாள் என்று கேலி செய்தார்கள்.  

20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் மிகப்பெரிய கனவாக இருந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவராவது அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இதேபோல் இன்னும் 20 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் மக்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.  

இதன்மூலம் பிற்காலத்தில் மனிதகுலத்திற்கு உதவக்கூடிய ஒரு திட்டத்தில் நான் முதலீடு செய்துள்ளேன் . குறைந்தபட்சம் நம் முன்னோர்கள் தொலைநோக்குடன் செயல்பட்டதாக அடுத்த தலைமுறையினர் உணருவார்கள் என்று ராஜீவ் பக்தி கூறியுள்ளார்.  
 
நிலவில் ராஜீவ் பக்தி வாங்கியுள்ள இடத்திற்கு பெயர் மேரே இம்பிரியமாம்  அவரைத் தொடர்ந்து அவருடைய உறவினர் லலித் மோகதாவும் நிலவில் இடம் வாங்கியுள்ளார். மேலும் லட்சக்கணக்கானோர் நிலவில் இடம் வாங்கியுள்ளதாகவும் ராஜீவ் பக்தி கூறியுள்ளார்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,228.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.