நடந்து முடிந்த இந்தியாவின் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், கேரளம், வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடி வரும் மூன்று நிலை அடிப்படை முகிழ்த்திருக்கிறது. 22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: உலகத்தில் எந்த மூலையிலும் மண்ணை ஆளுவதற்குத் தகுதி பெற்ற அமைப்புகள், கட்சிகள், அரச குடும்பங்கள் என்று எந்தக் களத்திலும் இரண்டு அணிகளாக பிரிந்து நிற்பதே மரபு. இரண்டு மட்டுமல்ல இரண்டுக்கும் மாற்றாக மூன்றாவதும் என்கிற நிலை தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகின்றது. ஆம் சேர, சோழ, பாண்டியர்கள் என்று மூவேந்தர்கள் தமிழகத்தைப் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்திருந்தனர். தமிழகத்தை தமிழர்களே ஆண்ட போது வரை இந்த மூன்று வகைப்பட்ட ஆட்சியே தொடர்ந்து வந்திருந்தது. நீண்ட கால பிரித்தானிய ஆட்சிக்குப் பிறகு இந்தியா விடுதலை பெற்று, தற்போது குடியாட்சி முறை இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் குடியாட்சியில் கூட நீண்ட காலமாக விடுதலை பெற்றுத் தந்த கட்சி என்ற தகுதியோடு காங்கிரஸ் என்ற ஒற்றைக்கட்சியே இந்தியாவில் செல்வாக்கு பெற்று ஆட்சி புரிந்து வந்தது. அந்த ஆட்சிஅதிகாரத்தில் ஹிந்தி பேசும் வட இந்தியத் தலைவர்களே ஆதிக்கத்தில் இருந்த காரணம் பற்றி ஹிந்தியே இந்தியாவின் ஒரே மொழி என்பதாக உலகிற்கு அடையாளம் காட்ட முனைந்தார்கள். கல்வியில் ஒன்றிய இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் ஹிந்தியை கற்கவேண்டிய அடிமைப்பாட்டிற்கு உள்ளாகியிருந்தனர். இந்த நிலையில்தாம் ஹிந்தி மொழிஆதிக்கத்தோடு, ஹிந்தி பேசும் மக்களின் மதமான ஹிந்துத்துவா ஆதிக்கத்தையும் முன்னெடுக்கும் கட்சியாக, இரண்டாவது கட்சியாக பாஜக இந்தியாவில் கடந்த ஆறேழு ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நடந்து முடிந்த இந்தியாவின் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், கேரளம், வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடி வரும் மூன்று நிலை அடிப்படை முகிழ்த்திருக்கிறது. ஆம் ஒன்றிய ஆட்சிக்கு முனையும் காங்கிரஸ் பாஜகவிற்கு மாற்றாக இனி இந்தியாவில் மாநில ஆட்சிக்கு முனையும் கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் என்கிற வகையில், மாநில ஆட்சிக்கு முனையும் திமுக, கேரளகம்யூனிஸ்ட், திரினமுல் காங்கிரஸ் வெற்றியை தமதாக்கிக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனியாகக் களம்கண்ட நாம் தமிழர் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதேவேளையில், 6.5 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்று, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் அடுத்தபடியாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாகப் பரிணமித்திருக்கிறது. தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்றத் தேர்தலில், மாற்றத்தை முன்வைத்து தேர்தலில் பங்கேற்ற அணிகளில், உண்மையான மாற்று நாங்கள்தான் எனச் சொல்லி அடித்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது நாம் தமிழர் கட்சி. பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயக்கமாகத் தொடங்கப்பட்ட அமைப்பு நாம்தமிழர் கட்சி. அது அடுத்த ஓராண்டில் தேர்தலில் போட்டியிடும் கட்சியாக மாற்றப்பட்டது. முதன்முறையாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 4,58,104 வாக்குகளைப் பெற்றது. வாக்கு விழுக்காட்டைப் பொறுத்தவரை 1.07 பெற்று கட்சிகளின் பட்டியலில் ஒன்பதாமிடத்தைப் பெற்றது. அந்தத் தேர்தலில், பொதுத்தொகுதியில், பட்டியலின வேட்பாளர்கள்; பெண்களுக்கு அதிக இடங்களில் வாய்ப்பு; அரசியல்அடிப்படையில் மிகவும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு; தொகுதியில் பெரும்பான்மை சமூகமாக இல்லாதவர்களுக்கு வாய்ப்பு; திருநங்கையை வேட்பாளராக்கியது எனப் பல பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டது நாம்தமிழர் கட்சி. அதைத் தொடர்ந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள நாற்பது தொகுதிகளில் இருபது தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும், இருபது தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும் களமிறக்கியது நாம் தமிழர் கட்சி. ஒட்டுமொத்தமாக 16,45,185 வாக்குகளைப் பெற்று ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது. அந்தக் கட்சியின் வாக்கு விழுக்காடு 1.1-ல் இருந்து 3.87-ஆக அதிகரித்தது. அப்போதே நாம் தமிழர் கட்சியின் மீது அனைவரின் கவனமும் லேசாகத் திரும்பியது. ஆனால் இந்தமுறை, 234 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி யாருமே எதிர்பாராத வகையில், 30,41,974 (6.6 விழுக்காடு) வாக்குகள் பெற்று திமுக அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் அரசியல் வளர்ச்சி என்பது படிப்படியாக நிகழ்ந்துவருகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட்ட 234 தொகுதிகளில் கிட்டத்தட்ட 183 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்தான் மூன்றாமிடம். தவிர, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை ஒரு தொகுதியிலும் முப்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை முன்று தொகுதிகளிலும், இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை 19 தொகுதிகளிலும், பதினைந்தாயிரத்துக்கும் அதிகமாக 36 தொகுதிகளிலும், பத்தாயிரத்துக்கும் அதிகமாக 103 தொகுதிகளிலும், 6 -9 ஆயிரம் வாக்குகளை 68 தொகுதிகளிலும் பெற்றிருக்கிறது. ஐந்தாயிரத்துக்கு குறைவான வாக்குகளை வெறும் நான்கு தொகுதிகளில் மட்டுமே பெற்றிருக்கிறது. தேர்தல் காலங்களிலும் சரி, மற்ற நேரங்களிலும் சரி எப்போதும் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கின்றனர் நாம் தமிழர் கட்சியினர். உறுப்பினர் சேர்க்கையில் தொடங்கி ஏரி, குளங்குளைத் தூர்வாருவது, நிலவேம்புக் குடிநீர் கொடுப்பது, பனை விதைகளை நடுவது, குருதிக்கொடை முகாம் நடத்துவது, பகுதிப் சிக்கல்களுக்காகக் குரல் கொடுப்பது என எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பலம். தமிழகத்தில் தற்போது ஊருக்கு நான்கு பேர் இருந்தாலும், அந்தக் கட்சிக்கு கிளை இல்லாத ஊர்களே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. கொரோனா காலத்திலும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவந்தனர் நாம் தமிழர் கட்சியினர். கொரோனா மீட்புப் பணிகளைக் கருத்தில்கொண்டு, பேரிடர் மீட்புப் பாசறை என தனி அமைப்பையே உருவாக்கினார்கள். கிருமிநாசினி தெளிக்கும் பணி முதல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வரை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து தன்னார்வலர்களாகச் செயல்பட்டனர். மக்களுக்குச் சாப்பாடு சமைத்துக் கொடுக்கும் வேலையில் மட்டும், தொகுதிக்கு 40 பேர் இருந்தனர். தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களத்தில் இறங்கிப் பணியாற்றினர். தமிழகத்தில், வட தமிழகத்தில் மட்டும் செல்வாக்கு பெற்ற கட்சி, தென் மாவட்டங்களில் மட்டும் செல்வாக்கு உள்ள கட்சி, மாநகரங்களில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி என எந்தவித சட்டகத்துக்குள்ளும் அகப்படாமல் தமிழகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கிறது நாம் தமிழரின் ஆளுமை. திமுகவும் அதிமுகவும் காங்கிரஸ், பாஜக என்பதான ஒன்றிய ஆட்சிக்கு முனையும் கட்சிகளுக்கு பணிந்து நிற்கையில், ஒன்றிய ஆட்சி! மாநில ஆட்சிகளுக்கு முனையும் கட்சிகளால் கூட்டணி ஆட்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்கிற மூன்றாவது விழிப்புநிலைக்கான கட்சியாக நாம்தமிழர் கட்சி இந்தியாவை கொள்கைப்பாட்டில் வழிநடத்தும் மூன்றாவது அணியாக நனிசிறக்க வாழ்த்துக்கள்.
பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழகம் கொண்டாடி வரும் அந்த மூன்று நிலை அடிப்படை இந்தியாவில் முகிழ்தால் போதுமா? தமிழகத்தில் முகிழ்க்க வேண்டாமா என்பதற்கும், முகிழ்க்க வேண்டும்தான் என்று அந்த மூன்றவது நிலைப்பாட்டுக் கட்சியாக நாம் தமிழர் கட்சியை தேர்வு செய்திருக்கின்றனர் தமிழக மக்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.