இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. வெள்ளிக் கிழமை ஆளுநர் மாளிகையில் தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்புக்கு எளிமையான விழா முன்னெடுக்கப்படுகிறது. 21,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: சட்டமன்றத் தேர்தலில் வென்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார். வருகிற வெள்ளிக் கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார். இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக மீண்டும் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 125 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதனால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். திமுகவின் வெற்றி செய்தி அறிந்ததும் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பேரறிமுகங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இராகுல்காந்தி, ஒன்றிய அமைச்சர்கள், டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திரா முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நரேந்திரமோடியும், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயம் வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்க இருக்கிறது. இன்று நடைபெறும் கூட்டத்தில், சட்டமன்ற திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதற்கான மடலில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட இருக்கின்றனர். அதன் பிறகு, அந்த மடலை எடுத்துக்கொண்டு, மு.க.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க இருக்கிறார். அவர் அழைப்பு விடுக்கும் பட்சத்தில், வரும் வெள்ளிக்கிழமை முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார். கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையிலேயே பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெற இருக்கிறது. திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் உள்பட சுமார் 160 பேர்கள் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதவியேற்பு உறுதிமொழியையும், கமுக்கக்காப்பு உறுதிமொழியையும் ஆளநர் பன்வாரிலால் புரோகித் அளித்திட வைப்பார். அன்றைய விழாவிலேயே திமுக அமைச்சரவையும் பொறுப்பேற்கும் என்று தெரிகிறது. அமைச்சர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியும் 90 விழுக்காட்டிற்கு மேல் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இளைஞர்களுக்கு 50 விழுக்காடு வாய்ப்பும், மூத்தவர்களுக்கு 50 விழுக்காடு வாய்ப்பும் வழங்கும் வகையில் இந்த அமைச்சரவை பட்டியல் இருக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக, மாவட்டத்திற்கு ஒருவர் என்ற அடிப்படையில் அமைச்சரவை பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, அமைச்சர்களும் இந்த விழாவிலேயே பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. விரைவில் சட்டமன்றக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டப்படுகிறது. அதில், தற்காலிக பேரவைத்தலைவர் முன்னிலையில் அனைத்து கட்சி சடடமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். ஆனால், சட்டமன்றத்தின் முதல் கூட்டம் அடுத்த மாதத்தில் நடக்கலாம் என தெரிகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.