Show all

மூன்றாவது முறை முதல்வரானார்! ஒன்றியத்தில் ஆளும் பாஜகவின், அனைத்து முற்றுகைகளையும் தகர்த்திட்ட மம்தா

எப்பாடுபட்டாவது இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஒன்றியத்தில் ஆளும் பாஜக- வங்காளத்தை ஆண்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பல்வேறு முற்றுகைகளை முன்னெடுத்த போதும், அனைத்து முற்றுகைகளையும் தகர்த்திட்ட மம்தா, இன்று மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார்.

22,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாக இன்று முதல்வராக பதவியேற்றார் மம்தா. ஆனால், மேற்குவங்க சட்டமன்ற தேர்தல் அமளிதுமளியை நாடே கடந்த மூன்று மாதங்கள் வேடிக்கை பார்த்தது. எப்பாடுபட்டாவது இம்முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று ஒன்றியத்தில் ஆளும் பாஜக- வங்காளத்தை ஆண்டுவரும் திரிணாமுல் காங்கிரஸ் மீது பல்வேறு முற்றுகைகளை முன்னெடுத்த போதும்  ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்று மல்லுக்கட்டினார் மாநில ஆட்சியில் இருந்த மம்தா.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுவேந்து அதிகாரி உட்பட பல முதன்மைத் தலைகளை பாஜக தன் வசம் இழுத்து, மம்தாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. எனினும், பலத்த போட்டியைச் சமாளித்து, மாபெரும் வெற்றியை பதிவு செய்தார் மம்தா. 

மேற்கு வங்காளத்தில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் 213 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான முதல்வராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார் 66 அகவையுள்ள மம்தா பானர்ஜி. எதிரிகளின் சூழ்ச்சி முன்னெடுப்பில், காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்திருக்கிறார். 

இந்த சூழலில், இன்று நடந்த பதவியேற்பு விழாவில், மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றார் மம்தா பானர்ஜி. கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை 10.45 மணிக்கு அவர் பதவியேற்பு மற்றும் கமுக்கக் காப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார். 

கொரோனா சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பதவியேற்பு நிகழ்வு குறைந்த ஆட்களுடன் எளிமையாக நடைபெறும் என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், பிற மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.அபிஷேக் பானர்ஜி, பிரசாந்த் கிஷோர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.