இந்திய மாணவ-மாணவிகள் யாருக்கும் எந்த நோய் தொற்று பாதிப்பும் இல்லை. இந்திய அரசும், தமிழக மற்றும் பிற மாநில அரசுகளும் விரைவாக நடவடிக்கை எடுத்து எங்களை இந்தியா வர உதவி செய்ய வேண்டும் என்று காத்திருக்கின்றனர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு மருத்துவம் படிக்க சென்ற மாணவர்கள். 07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் என்ன செய்ய முடியும் எங்களை என்று, திரைகடலோடி கல்வியைப் படி என்ற முயற்சியில் பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்து வரும் இந்திய மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள மணிலா விமானநிலையத்தில் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. காரணம்: கொரோனா பீதியால் 34 நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. மணிலா விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக தவித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் காட்வின் லியோ தொலைபேசி மூலம் கூறியதாவது:- எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு அருகே உள்ள வட்டம் புதுக்காடுவெட்டி விளை பகுதியாகும். எனது தந்தை ராஜேஸ்குமார். நான் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு மருத்துவக்கல்லூரியில் 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறேன். பிலிப்பைன்சில் அரசு முழுமையாக விடுமுறை அளித்து இருக்கிறது. எங்கள் கல்லூரிக்கு 35 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. எங்கள் கல்லூரி நிர்வாகம் உடனடியாக எங்களை தாய்நாடு திரும்ப அறிவுறுத்தியது. அதன்படி நானும், தமிழகத்தை சேர்ந்த மேலும் 15 மாணவ-மாணவிகள் உள்பட 80 மாணவ-மாணவிகள் கடந்த செவ்வாய்க் கிழமை இரவு விமானத்துக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்தோம். இந்திய அரசின் தடை காரணமாக மணிலா விமான நிலையத்தில் தவித்து வருகிறோம். இங்கு காத்து இருக்கும் இந்திய மாணவ-மாணவிகள் யாருக்கும் எந்த நோய் தொற்று பாதிப்பும் இல்லை. இந்திய அரசும், தமிழக மற்றும் பிற மாநில அரசுகளும் விரைவாக நடவடிக்கை எடுத்து எங்களை இந்தியா வர உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தை சேர்ந்த காட்வின் லியோ மற்றும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்நத கிட்டப்பா என்பவருடைய மகன் பிரசாந்த், அரக்கோணத்தை சேர்ந்த நடராஜன் என்பவருடைய மகன் டில்லி கணேஷ், சதீஸ் குமார் என்பவருடைய மகள் ஆர்த்தி, ஜோஷ்வா பிரின்ஸ் என்பவருடைய மகன் முத்துசாம்ராஜ் மற்றும் ரூபன் உள்பட 15 பேர் உள்ளனர். கேரளாவை சேர்ந்த 13 பேர் மற்றும் ஆந்திரா, குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்டவர்கள் மணிலா விமான நிலையத்தில் பரிதவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



