10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மக்களாட்சிதான்; நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் மோடி என்று பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிமூலம் அமைதியாகப் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மக்களைக் கொல்லும் இந்தப் படுகொலைக்கு யார் உத்தரவிட்டது? இந்திய வரலாற்றில் இது கறுப்பு நாள். நல்ல ஆரோக்கியமான சுற்றுப்புறச் சூழலைத்தானே அந்தப் பகுதி மக்கள் கேட்டார்கள், இது மிகப்பெரிய குற்றமா? ஜனநாயகத்தில் தங்களின் குரலை உயர்த்திப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு தீவிரவாதிகளுக்கு இணையாக சுட்டுக்கொலை செய்தால் மக்கள் எங்கு செல்வார்கள்? இந்தப் படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொலை செய்தவர்கள், காரணமானவர்கள் கொடூரமாகத் தண்டிக்கப்பட வேண்டும். நான் இந்த விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கிறேன். தமிழகத்தில் ஆளும் அரசிடம் இருந்தும், நிர்வாகத்திடம் இருந்து ஏராளமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இந்தியத் தலைமை அமைச்சர் மோடி நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. காஷ்மீர் கதுவாவில் சிறுமி பலாத்காரத்தின் போதும் பேசவில்லை, பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் வாய் திறக்கவில்லை. தூத்துக்குடியில் மக்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டபோதும் நீங்கள் மவுனம் கலைக்க மாட்டீர்களா? காஷ்மீர் பற்றி எரிகிறது, நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டீர்கள். இப்போது தமிழ்நாடு கொந்தளிக்கிறது. ஆர்எஸ்எஸ் தொண்டரின் ஜோடனையான, தோரணைப் பேச்சை இப்போது கேட்க முடியுமா இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



