15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூய்மையான கிராமங்கள் உருவாக்கினால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்று மக்களுக்கு முப்பத்தி மூன்று நாட்கள் கொடு விதித்து அசிங்கப் படுத்தியிருக்கிறார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர், வார இறுதி நாள்களில் நகரம் மற்றும் கிராமப் புறங்களுக்குச் சென்று ஆய்வுசெய்துவருகிறார். அதன்படி இன்று, 155-வது வாரமாக மண்ணாடிபட்டு கிராமத்துக்குச் சென்றார். அங்கு, தொடக்க சுகாதார நிலையத்தை ஆய்வுசெய்த அவர், கிராம வீதிகளை ஆய்வு செய்தார். அப்போது, அனைத்துப் பகுதிகளும் குப்பை கூளங்களாகக் காணப்பட்டன. மேலும், கழிவுநீர் வீதிகளில் தேங்கி நிற்பதைக் கண்டு கோபமடைந்த அவர், அங்கிருந்த அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் கடிந்துகொண்டார். 'இனிவரும் காலங்களில், தூய்மையான கிராமங்களுக்கே அரசு இலவசங்கள் வழங்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார். தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்களும் இணைந்து திறந்தவெளிக் கழிப்பிடம், குப்பை மற்றும் நெகிழி இல்லாத பகுதி என குடிமைப்பொருள் வழங்கல் துறைக்கு சான்றிதழ் அளித்தால் மட்டுமே இலவச அரிசி வழங்க வேண்டும் என்றும், அனைத்து தொகுதிகளும் 4 கிழமைக்குள் தூய்மைப்படுத்தினால், இலவச அரசி வழங்கப்படும் எனவும், இதற்காக முப்பத்தி மூன்று நாட்கள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கெடு விதித்துள்ளார். இது தொடர்பாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு உயரதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்தக் காட்டுதர்பார் உத்தரவு, கிராம மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகனிடம் கேட்டபோது, 'தூய்மையான கிராமம் என்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என துணைநிலை ஆளுநரின் செயல் ஏழை மக்களைக் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தும் செயல்தான். மக்களை மிரட்டும் பாணியில் உத்தரவு வெளியிடுவது துணைநிலை ஆளுநருக்கு அழகல்ல. பகுதிகள் தூய்மையாக இல்லையெனில் அதற்கு அதிகாரிகளே பொறுப்பு. மக்கள் என்றைக்கும் பொறுப்பாக மாட்டார்கள். இதில் முதல்வரின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்தவேண்டும்' என்று கூறினார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,771.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



