Show all

மெரினாவை முடக்கியது எடப்பாடி- பன்னீர் அரசு! இரவுபகல் பாராது, கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி

16,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவண் அரசை வலியுறுத்தி சென்னை சல்லிக்கட்டு (மெரினா) கடற்கரையில் 90 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவரான அய்யாக்கண்ணு சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை அறங்கூற்றுவர் டி.ராஜா முன்பு நடந்தது. அப்போது அரசு தரப்பில் அணியமான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், 'சல்லிக்கட்டு கடற்கரையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி இல்லை. சல்லிக்கட்டு கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என அரசும் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முதல்வர், துணை முதல்வர் பங்கேற்ற உண்ணாநிலை கூட சேப்பாக்கத்தில் தான் நடந்தது. எனவே பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஏற்கெனவே சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள சேப்பாக்கம் அல்லது வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளில் மனுதாரர் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கலாம்' என தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் அணியமான வழக்கறிஞர் அய்யாத்துரை, 'விடுதலை போராட்டத்தின்போது கூட சல்லிக்கட்டு கடற்கரையில் காந்தியடிகள் முதற்கொண்டு பலர் அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர். சல்லிக்கட்டுக்காக நடந்த தன்னெழுச்சிப் போராட்டம் மெரினாவில் நடந்ததால்தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இன்றைக்கு தமிழ் மக்களால் மெரினா கடற்கரை பெருமையாக சல்லிக்கட்டு கடற்கரை என்றே அறிப்படுவதாகின்றது. எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 90 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதம் மேற்கொள்ள அனுமதியளிக்க வேண்டும்' என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில்,

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த அறங்கூற்றுவர் டி.ராஜா, 'மெரினாவைவிட காவிரிதான் தலையாயத்துவம். அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பாகக்கூட போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, மனுதாரர் காவிரி பிரச்சினைக்காக மெரினாவில் ஒருநாள் மட்டும் அறவழியில் உண்ணாவிரதம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. மனுதாரருக்கு உரிய பாதுகாப்பை காவல்துறையினர் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

அவசர அவசரமாக தனி அறங்கூற்றுவர் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்போவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வில் அன்று மாலையே கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச். அரவிந்த் பாண்டியன் முறையீடு செய்தார்.

இதன்பேரில் அறங்கூற்றுவர்கள் எஸ்.மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பாக முறையிடுமாறு தலைமை அறங்கூற்றுவர் அப்போது அறிவுறுத்தினார்.

அதன்படி, அரசு தரப்பில் உடனடியாக மேல்முறையீட்டு மனு பதிகை செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று இரவு அறங்கூற்றுவர்கள் எஸ்.மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்தது. கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த் பாண்டியன் அணியமாகி, 'மெரினாவில் போராட்டம் நடத்த வேண்டாம் எனும் எங்கள் தரப்பு வாதங்களை தனி அறங்கூற்றுவர் கருத்தில் கொள்ளாமல் மெரினாவில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்துள்ளார். அய்யாக்கண்ணு போலவே இன்னும் 25 சங்கத்தினர் மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்து, அய்யாக்கண்ணுவை அனுமதித்தால் பின்னர் அதுவே வாடிக்கையாகிவிடும். வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம், காயிதே மில்லத் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் மனுதாரர் உண்ணாநிலை இருக்கலாம். சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால்தான் மெரினாவில் அனுமதி மறுக்கப்படுகிறது' என வாதிட்டார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அய்யாத்துரை, விடுதலைக்கு முன்னும் பின்னும்கூட மெரினாவில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. மெரினாவில் போராட்டம் நடத்தினால் பொது மக்களுக்கும் எந்த தொந்தரவும் இருக்காது' என்றார்.

இதையடுத்து அறங்கூற்றுவர்கள், 'சல்லிக்கட்டு கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளித்து தனி அறங்கூற்றுவர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதிக்கப்படுகிறது. அரசு குறிப்பிடும் 3 இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து உண்ணாநிலை இருக்க மனுதாரர் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை காவல் துறை முறையாக பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

வழக்குகளில் சிக்கிய, பலகோடி மதிப்புள்ள, பலவகையான வண்டிகள், எல்லா காவல்நிலையங்கள், அறங்கூற்று மன்றங்களுக்கு முன்னால் மழையில் நனைந்து வெயிலில் உலர்ந்து, துருவேறி வீணாகிக் கொண்டிருப்பதைப் போல, வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகின் இரண்டாவது அழகான, நீளமான கடற்கரையை முடக்கியது எடப்பாடி- பன்னீர் அரசு! இரவுபகல் பாராது, கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி!

எடப்பாடி- பன்னீர் அரசு, தமிழர் உரிமை பறிப்பு அல்லது மறுப்புக்கு நள்ளிரவில் கூட தொடர்ந்து சட்ட நகர்த்தலை மேற்கொண்டு, தங்களை பாஜக நிருவாகத்தில் இயங்கும் கூட்டம் என இந்த வகையாகவும், நிரூபணம் செய்து விட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,772.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.