03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மழை குறித்த சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளதால் மக்கள் நம்மதி அடைந்துள்ளனர். இதையடுத்து, நாளை முதல் கொச்சியில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு சொந்தமான விமானஓடுதளத்தில் பயணிகள் விமானத்தை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மக்கள் இலவசமாக தங்கள் செல்பேசியில் தரவுகளையும், சேதிகளையும் அனுப்பத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனுமதியளித்துள்ளன. கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பெருமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை 350-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். மாநிலத்தில் மீட்புப் பணிக்காக ராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே 14 மாவட்டங்களுக்குக் அடைமழை (கனமழை) நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், மீட்புப்பணி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவியது, மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்புவதிலும் சிக்கல் ஏற்பட்டது. தண்ணீர் வடியத் தொடங்கிய நிலையில், மீண்டும் மழை எச்சரிக்கையால் மக்கள் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில், 14 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மிகஅடைமழை (கனமழை) எச்சரிக்கை திரும்பப் பெறுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கேரள மாநிலத்தில் உள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும், இடுக்கி அணையில் இருந்து 5 மதகுகள் வழியாகத் தண்ணீர் வெள்ளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைந்ததைத் தொடர்ந்து 2 மதகுகள் அடைக்கப்பட்டுவிட்டன. கடந்த ஒருகிழமையாகப் பெய்த மழையால், கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுவதும் மழைநீர் புகுந்துள்ளதால், விமானசேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் கொச்சியில் உள்ள விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளத்தில் பயணிகள் விமானத்தை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய நெருக்கடி மேலாண்மை குழுவின் தலைவரும், கேபினெட் செயலாளருமான பி.கே.சின்ஹா தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கேரள மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் பேசவும், உறவினர்கள், நண்பர்களின் நலனை அறிந்து கொள்ளும் வகையில் கைப்பேசிகளுக்கு இலவச சேதி சேவையைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. இலவச தரவுச் சேவையையும் தொடங்கியுள்ளன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,884.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



