Show all

அமீரக காவல்துறையினருக்கு மட்டுமல்ல பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள்! கேள்வி: ஏன்? விடை: அதிர வைக்கும் தொழில் நுட்பம்

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துபாய் காவல்துறையினர் நாம் அன்றாடம் பார்க்கும் சின்ன சின்ன பூச்சிகளை தங்களின் உளவாளிகளாக பயன்படுத்தி பெரிய பெரிய குற்றம் செய்யும் குற்றவாளிகளை சுலபமாக கண்டுபிடிக்கின்றனர்.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அந்தக் குற்றங்களை செய்யும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கும் மிகவும் சவாலாகவே இருக்கின்றது.

ஆனால் சில நாடுகளில் இருக்கும் காவல்துறையினர் சில சமயங்களில் நாம் நினைத்து பார்க்காத அளவிற்கு செயல்பட்டு சில குற்றவாளிகளை கண்டுபிடிக்கின்றனர்.

அபுதாபி காவல்துறையினர், தடயம் இல்லாத குற்றங்களையும் நன்கு ஆராய்ந்து குற்றவாளியை எளிதாகப் பிடித்துவிடுகின்றனர். இதற்கு அவர்கள் பூச்சிகளையும் தங்களின் ரகசிய உளவாளிகளாக பயன்படுத்தி , அதன்மூலம் ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கின்றனர்.

நம்மை சுற்றி திரியும் ஈக்களும், பூச்சிகளும் இறந்த உடல்களில் அமரக்கூடியவை. அதேபோல் உடலை போட வரும் கொலையாளிகள் மீதும் அமரும். சில கொசுக்கள், கொலையாளிகளின் ரத்தத்தையும் குடிக்கின்றன. இந்த செயலால், கொலை செய்தவர்கள், செய்யப்பட்டவர்கள் என இருதரப்பினரின் தகவலும் பூச்சிகளின் வயிற்றில் சேமிக்கப்படுகின்றன.

எனவே குற்றம் நடைபெற்ற பகுதிகளில் இருக்கும் பூச்சிகளை கொண்டு வந்து பரிசோதனை செய்தால், இந்த சம்பத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர், அவர்கள் யார் என்ற எல்லா தகவல்களும் சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும். இதைத்தான் துபாய் காவல் துறை பயன்படுத்துகிறது.

அதேசமயம் பூச்சிகளும், கொசுக்களும் பலர் மீதும் அமர்வதால், நிரபராதிகள் கைது செய்யப்படுவார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. ஆனால் கலீபா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் இணைந்து பூச்சிகளை பயங்கரமாக அலசி ஆராய்வதால் திரவம் மற்றும் ரத்தம் பூச்சிகளின் வயிற்றில் எப்போது சேமிக்கப்பட்டது? கொலை செய்யப்பட்ட நபருக்கும், சந்தேகப்படும் நபருக்கும் என்ன சம்பந்தம்? கொலை நடந்த நேரத்தில் சந்தேகப்படும் நபர் எங்கு இருந்தார்? என பல உண்மை கண்டறிய முடியும் என்றுள்ளார் .

இதுநாள் வரை பூச்சியின் உதவியால் ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றங்களில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை அபுதாபி காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இங்கு குற்றம் நடந்த இடங்களுக்கு மோப்ப நாய் வரவழைக்கப்படுவதை போல, பூச்சிகளை சேகரிக்கும் குழுவையும் வரவழைக்கிறார்கள். அவர்கள் குற்றம் நடந்த இடத்தில் இருக்கும் பூச்சிகளை பிடித்து ஆராய்ச்சி நடத்தி, தடயங்களை சேகரிக்கிறார்கள்.

சுமார் 20 பூச்சிகள் பிடித்தால், அதில் வெறும் ஒன்றில்தான் தடயத்திற்கான ஆதாரம் இருக்குமாம். அதனால் மிகவும் கவனமாக பூச்சிகளை தேடிப்பிடிக்கிறார்கள். இவற்றை தகுந்த முறையில் ஆராய்வதற்காகவே அபுதாபி நகரம், அல் அய்ன் மற்றும் அல் தப்ரா ஆகிய மூன்று இடங்களில் நவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியால், அமீரக காவல்துறையினருக்கு மட்டுமல்ல பூச்சிகளுக்கும் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,884.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.