22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தென் ஆப்பிரிக்கா சென்று உள்ளார். விமானப்படையின் ஐ.எப்.சி.31 ரக விமானத்தில் பயணம் செய்தார். திருவனந்தபுரம் மற்றும் மொரீஷியசில் இறங்கி எரிபொருள் நிரப்பி விமானம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி திருவனந்தபுரத்தில் எரிபொருள் நிரப்பி விட்டு, நேற்று பிற்பகல் 2.08 மணிக்கு விமானம் புறப்பட்டது. இந்த விமானம் மாலி வான்பரப்பை மாலை 4.44 மணிக்கு கடந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தின் கட்டுப்பாடு மொரீஷியஸ் கட்டுப்பாட்டு அறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மொரீஷியஸ் வான்பரப்பை அடைந்த அந்த விமானத்தால், அந்த நாட்டு விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியவில்லை. அது ரேடாரின் இணைப்பில் இருந்து விடுபட்டு திடீரென மாயமானது. இதனால் மொரீஷியஸ் விமான போக்குவரத்து அதிகாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மாலி வான்பரப்பை விமானம் கடந்த பின்னர்தான் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. சுஷ்மா சுவராஜ் பயணம் செய்த விமானம் நடுவானில் மாயமானதையடுத்து 'இன்செர்பா' உஷார் நிலையை அதிகாரிகள் பிறப்பித்தார்கள். பிரச்சினையில் சிக்கும் விமானங்களை மீட்கும் விவகாரத்தில் பிறப்பிக்கப்படும் முதல் கட்ட உஷார் நிலை இதுவாகும். எனினும் 14 நிமிடங்களுக்குப்பின் அதாவது மாலை 4.58 மணிக்கு சுஷ்மாவின் விமானம் மொரீஷியஸ் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டது. பின்னர் அது மொரீஷியசில் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் இதழியலாளர்கள் பரபரப்பாகினர். நடுவானில் திடீரென்று மாயமான நடுவண் அமைச்சர், காணாமல் போன விமானத்தில் பயணித்த நடுவண் அமைச்சர் என்றெல்லாம் செய்திதாள்கள் சிறப்பு பதிப்பு வெளியிடத் தொடங்கி விட்டன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,809.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



