பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசு, சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாக பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானி திடீரென பாராட்டி உள்ளார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோல்வியைச் சந்தித்தது. இந்த தோல்விக்காக பிரதமர் மோடியையும், அவரது தீவிர ஆதரவாளரான கட்சி தலைவர் அமித் ஷாவையும் மறைமுகமாக சாடி, கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்கா, சாந்தகுமார் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டனர். இது அந்தக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. ஆமதாபாத் மாநகராட்சி தேர்தலில் கான்பூர் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் அத்வானி நேற்று ஓட்டுபோட்டார். அதைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தல்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான். இந்த முறை இங்கு உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என கூறினார். நல்ல காலத்தை கொண்டு வருவோம் என்று பாராளுமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை, குறிப்பாக விலைவாசியை குறைப்போம் என்று கூறியதை, மோடி அரசு நிறைவேற்ற தவறி விட்டதா? பருப்பு விலை கிலோ ரூ.200 அளவுக்கு உயர்ந்ததே? எந்த ஒரு நிர்வாகத்துக்கும், எதையும் செய்து முடிப்பதற்கு ஒரு கால அவகாசம் வேண்டும் என்று நான் நம்புகிறேன். அரசாங்கம் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே நல்ல சாதகமான முடிவுகள் வரும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.