Show all

ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் :நடுவண் அரசு

ராமர் பாலத்தைச் சேதப்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று நடுவண் அரசு தெரிவித்துள்ளது. மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில நடுவண் அரசு உறுதி அளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி, மன்னார் வளைகுடாவில் உள்ள ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் நடுவண் அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில், தாம் தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் இன்னமும் நடுவண் அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று நடுவண் அரசு ஒரு பதில் மனுவைத் தாக்கல் செய்தது. அதில், மன்னார் வளைகுடாவில் உள்ள ராமர் பாலம் வழியாக சேதுக்கால்வாய் திட்டத்தை நிறைவேற்றமாட்டோம். மக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேறுபாதையில்தான் சேதுக்கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவைத் திரும்பப் பெறுவது குறித்து வரும் 26-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.