Show all

பொருளாதார வீழ்ச்சி உண்மை சத்ருகன் சின்ஹா அலசல்

பொருளாதார வீழ்ச்சிக்கு, முந்தைய காங்கிரஸ் அரசை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. பொருளாதாரத்தை சீர்படுத்த நமக்கும் (பாஜக) போதிய கால அவகாசம் இருந்தது என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா (84) கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு நடுவண் அரசு வழி வகுத்துவிட்டதாகவும், பிரதமர் மோடியும், அருண் ஜேட்லியும்தான் இதற்குக் காரணம் என்றும் ஆங்கில நாளிதழில் யஷ்வந்த் சின்ஹா புதன்கிழமை எழுதிய கட்டுரை தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய சின்ஹா கூறியதாவது:

நாட்டில் நிலவி வரும் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பேச கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். ஆனால், எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. நான் பிரதமரிடம் பகிர்ந்து கொள்ளும் கருத்துகளால் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்பினேன். ஆனால், எனக்கு பிரதமர் இல்லத்தின் கதவுகள் அடைக்கப்பட்டே இருந்தன. எனவே, எனது கருத்துகளைப் பத்திரிகை வாயிலாகத் தெரிவிக்க நேரிட்டது.

ஆலோசனைகளைக் கேட்க வேண்டும்: பொருளாதார விவகாரங்களில் வல்லுநர்களான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்களின் கருத்துகளை எந்த அரசாக இருந்தாலும் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் கருத்துகள் அனைத்தையுமே அரசியல்ரீதியாக அணுக வேண்டிய தேவையில்லை என்றார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 40 மாதங்களாக ஆட்சியில் இருந்து திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. எனவே, பொருளாதார வீழ்ச்சிக்கு முந்தைய அரசை மட்டும் குற்றம்சாட்ட முடியாது. பொருளாதாரத்தை மேம்படுத்த இப்போதைய அரசுக்கும் போதிய கால அவகாசம் இருந்தது.

ஒவ்வொரு காலாண்டிலும் நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமடைந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கு முன்பு நான் பேசிவிட வேண்டும் என்று நினைத்தேன். இனிமேலாவது பொருளாதாரப் பிரச்னையை சீராக்க நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

நாட்டின் பொருளாதாரம் சார்ந்த சில செய்திகளைப் பொதுமக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்த காரணத்தால்தான் அந்தக் கட்டுரையை எழுதினேன். அரசு அடிப்படையில் இருந்தே திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். எனது கட்டுரை இந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று நான் கருதவில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தபோது நாட்டில் நிலவி வந்த சூழ்நிலை விரைவாக மேம்படும் என்று அனைவரும் நம்பினோம். ஆனால், அரசின் செயல்பாடுகள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு இல்லை.

முந்தைய அரசைக் குறை கூறுவதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில் இப்போதைய அரசுக்கு முழு அதிகாரம் கிடைத்துள்ளது என்றார் யஷ்வந்த் சின்ஹா.

84 அகவையுள்ள யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் ஆட்சிப் பணித் துறை அதிகாரியாவார். முன்னாள் தலைமை அமைச்சர் வாஜ்பாய் தலைமையிலான நடுவண் அரசில் 1998-2002 ஆம் ஆண்டில் நிதியமைச்சராகவும், 2002-2004 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறிய கருத்து தவறு என்பதை நிரூபிக்க முடியுமா? என்று நடுவண் அரசுக்கு சிவசேனைக் கட்சி சவால் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னாவில் வியாழக்கிழமை வெளியான கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

நிதித் துறையை நீண்ட காலம் தன் வசம் வைத்திருந்த பாஜகவின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவே, நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி சில தகவல்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர், ‘நேர்மையற்றவர்அல்லது ‘தேசவிரோதிஎன்று அழைக்கப்படலாம்.

ரஷியாவில் ஸ்டாலினின் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் மாயமாகி விடுவார்கள். அவர்களை மீண்டும் பார்க்க முடியாது. அதேபோல், யஷ்வந்த் சின்ஹாவுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்பதைக் காண ஆவலாக இருக்கிறது.

யஷ்வந்த் சின்ஹாவின் குற்றச்சாட்டுகள் தவறு என நடுவண் அரசால் நிரூபிக்க முடியுமா என்று அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் மாநில பாஜக பாரளுமன்ற உறுப்பினரும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹா கீச்சு வலைதளத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் கருத்துகளை பாஜக-வினர் மறுத்துப் பேசுவது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.

கட்சியின் நன்மையையும், நாட்டு நன்மையையும் கருதியே அவர் அந்தக் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

‘கட்சியின் நலனைவிட நாட்டின் நலனே முக்கியம்என்று நமது பிரதமர் நரேந்திர மோடியே பேசுவதுண்டு. அந்த அடிப்படையிலேயே யஷ்வந்த் சின்ஹா தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா தலைசிறந்த தேசப்பற்றாளரும், அறிஞரும் ஆவார். நாட்டின் மிகச் சிறந்த நிதியமைச்சர்களின் அவரும் ஒருவர். தனது அனுபவத்தைப் பயன்படுத்தி, நடுவண் அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள குறைபாடுகளை உணர்த்தியிருக்கிறார். கட்சியின் நன்மையைக் கருதி, இதுபோன்ற உண்மைகளை எடுத்துச் சொல்வதற்காக பாஜக தலைவர்கள் யஷ்வந்த் சின்ஹாவை பாராட்ட வேண்டும் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் சத்ருகன் சின்ஹா குறிப்பிட்டுள்ளார்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.