ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வென்று தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் 4வது ஒருநாள் போட்டி பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலி பேட்டிங்கை தேர்வு செய்தது, அதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக வார்னர் 119 பந்துகளில் 4 சிக்சர், 12 பவுண்டரியுடன் 124 ரன்களும் பின்ச் 96 பந்துகளில் 3 சிக்சர், 10 பவுண்டரியுடன் 94 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், கேதார் ஜாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதைதொடர்ந்து 335 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இந்தியா 106 ரன்கள் எடுத்த நிலையில் ரகானே 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் அவுட் ஆனதால் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் மட்டுமே சேர்த்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 65 ரன்களும் கேதார் ஜாதவ் 67 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட், கோல்டர்நைல் 2 விக்கெட்டும், சம்பா, கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இது அவருக்கு 100 வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உமேஷ் யாதவ் இப்போட்டியில் தனது 100 வது விக்கெட்டை கைப்பற்றினார். இந்தியா ஆடிய போது 41.1 ஓவரில் மழை சிறிது நேரம் குறுக்கிட்டது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



