Show all

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு கடனுதவியில் வங்கிகள் நிலைபாடு, தன் விசயத்தில் இல்லை! நடுவண் அரசின் இரட்டை வேடம்: மல்லையா

கடன் சுமையால் தத்தளித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வங்கிகள் ஆயிரத்து 500 கோடி ரூபாய்  கடன் கொடுக்க  தயாராக உள்ள நிலைபாடு, தன் விசயத்தில் ஏன் இல்லை? இதன் மூலம் நடுவண் அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் விஜய் மல்லையா 

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடுமையான நிதி நெருக்கடியாலும் கடன் சுமையாலும் தொடர்ந்து இயங்க முடியாத சூழலில் இருக்கிறது. அதன் நிர்வாகப் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலகி உள்ளார். இதனால் மேலும் நெருக்கடி அதிகமாகி உள்ளது.

அதையடுத்து அந்நிறுவனத்தை மீட்க பொதுத்துறை வங்கிகள் கடன் தர முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் மல்லையா ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க பொதுத் துறை வங்கிகள் முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

இதே போல தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் நெருக்கடியில் சிக்கி தவித்த போது நடுவண் அரசு உதவ முன்வரவில்லை. தனது கிங்பிசர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களின் நலனுக்காக 4 ஆயிரம் கோடி இருப்பு வைத்திருந்ததாகவும், அதை அங்கீகரிக்காமல் வங்கிகள் மூலம் நடுவண் அரசு முடக்கியதாகவும், இதனால் தனது தலைசிறந்த விமான நிறுவனம், ஊழியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வங்கிகள் ஆயிரத்து 500 கோடி ரூபாய்  கடன் கொடுக்க  தயாராக உள்ளன. இதன் மூலம் நடுவண் அரசின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

காந்தியார் கொலை வழக்கு தெளிவாய் இருப்பது போல், இராஜிவ் கொலை வழக்கு தெளிவாக இல்லை என்பதும்- நிரவ்மோடி கடன் பெற்று ஏமாற்றியது தெளிவாகத் தெரிவது போல் மல்லையா கடன் விசயத்தில் தெளிவு இல்லை என்பதுமாக மக்கள் நடுவே ஐயம் இருந்து கொண்டே இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,103.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.