Show all

மக்களாட்சியின் மாண்பு: ஹிந்தித்திணிப்பு என்னும் மூட்டிய காட்டுத்தீ! 82 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.

எண்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, பிரித்தானிய இந்திய ஒன்றியத்திலேயே, இராசகோபாலாச்சாரி அவர்களால் மூட்டி வைக்கப்பட்ட, ஹிந்தித்திணிப்பு என்னும் காட்டுத்தீ, பிரித்தானிய அரசால் சாய்க்கப் பட்ட போதும் கூட, விடுதலை பெற்ற மக்களாட்சியிலும், காங்கிரசாலும், பாஜகவாலும் தூக்கி நிறுத்தப் பட்டு, அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது ஹிந்தித்திணிப்பு என்னும் மூட்டிய காட்டுத்தீ!

21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: எண்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரித்தானிய இந்தியாவில், ஹிந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொணர்ந்து தமிழகத்தில் ஹிந்திதிணிப்பு என்கிற மூட்டிய காட்டுத்தீ ஏற்றி வைத்தவர் இராசகோபாலாச்சாரி. 

இராசகோபாலாச்சாரி ஏற்றி வைத்த அந்த மூட்டிய காட்டுத்தீ பாதுகாக்கும் முகமாக- இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் ஹிந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் முயற்சியை நடுவண் அரசில் பொறுப்பேற்ற எல்லா அரசுகளும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

82 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் இராசகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் ஹிந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ.வெ.இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். 

அரசின் காவல் நடவடிக்கைகளில் தாளமுத்து, நடராசன் ஆகியோர் போராடியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்து சிறையிலேயே இறந்தனர்;. பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரசு அரசு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் 'எர்ஸ்கின் பிரபு' இந்தக் கட்டாய ஹிந்திக் கல்வியை நீக்கினார்.

ஒரு எட்டு ஆண்டுகள் பிரித்தானியர் ஆட்சியில் தமிழகம் ஹிந்தித் திணிப்பிலிருந்து விடுதலை பெற்றிருந்தது. பிரித்தானியாவிலிருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946ஆம் ஆண்டு விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது. மொழிகளைக் குறித்த விவாதம் இம்மன்றத்தில் தீவிரமாக நடைபெற்றது. அரசியலமைப்பை எந்த மொழியில் எழுதுவது, மன்றத்தின் நடவடிக்கைகள் நடத்தப்படவேண்டிய மொழி, புதிய குடியரசுக்கான 'தேசியமொழி' போன்ற விசயங்கள் மிகவும் சூடாக விவாதிக்கப்பட்டன. ஒரு பக்கம் ஹிந்தி பேசும் மாநிலங்களின் உறுப்பினர்களான அல்கு ராய் சாஸ்திரி, ஆர்.வி.துலேகர், பாலகிருஷ்ண சர்மா, புருசோத்தம் தாஸ் டாண்டன் (ஐக்கிய மாகாணம்), பாபுநாத் குகா (பீகார்), அரி வினாயக் படஸ்கர் (மும்பை), சேத் கோவிந்த் தாஸ் (மத்திய மாகாணம்) ஆகியோர் பல ஹிந்தி ஆதரவு மசோதாக்களைக் கொண்டுவந்து ஹிந்தியை மட்டுமே தேசிய மொழியாகத் தேர்வு செய்ய வாதாடினர். 10 திசம்பர் 1946 அன்று துலேகர் ஹிந்தி அறியாதவர்கள் இந்தியாவில் இருக்க உரிமையற்றவர்கள். இந்தியாவின் அரசியலமைப்பை முடிவு செய்கின்ற இந்த மன்றத்தில் இருந்துகொண்டு ஹிந்தி அறியாதவர்கள் உறுப்பினராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்; அவர்கள் விலகிக் கொள்ளலாம் என்று முழங்கினார்.

ஹிந்தி தேசியமொழியாவதைத் தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கே, ஜி.துர்காபாய், டி.ஏ.ராமலிங்கம் செட்டியார், என்.ஜி. ரங்கா, என்.கோபாலசாமி ஐயங்கார் (அனைவரும் சென்னை மாகாணம்), எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி ராவ் (மைசூர்) ஆகியோர் எதிர்த்தனர். இவர்கள் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வாதிட்டனர். அவர்களது வாதத்தின் சாரமாக டி.டி.கேவின் பின்வரும் பேச்சினைக் குறிப்பிடலாம்:

'நாங்கள் ஆங்கிலத்தை முற்காலத்தில் வெறுத்தோம். எனக்கு எந்த பிடித்தமும் இல்லாத சேக்சுபியரையும் மில்டனையும் படிப்பது கட்டாயமானதால் நான் வெறுத்தேன். எங்களை ஹிந்தி படிக்கக் கட்டாயப்படுத்தினால், எனது அகவையின் காரணமாக இப்போது என்னால் படிக்க முடியாதிருக்கலாம், என்மீது திணிக்கப்படும் கூடுதல் சுமையால் படிக்க விரும்பாமலும் இருப்பேன். இத்தகைய சகியாமை, நாம் வேண்டுகின்ற பலமான மைய அரசு, மிகத் தேவையான பலமிக்க மைய அரசு, அவ்வரசு பேசும் மொழி அறியாத மக்களை அடிமைப்படுத்துவதாகவும் மாறுமோ என்று எங்களை அச்சமடையச் செய்கிறது. ஐயா அவர்களே, தென்னிந்தியாவில் ஏற்கெனவே பிரிவினை நாடும் சில சக்திகள் உள்ளன, அவர்களை எதிர்கொள்ள எனது மதிப்பிற்குரிய உத்திரப் பிரதேச நண்பர்கள் தங்களது கூடுதலான 'ஹிந்தி ஏகாதிபத்திய' நடவடிக்கைகளால் எந்த உதவியும் ஆற்றவில்லை என்பதை நான், தெற்கு வாழ் மக்களின் சார்பாக எச்சரிக்கை விடுக்கிறேன். ஆகவே எனது உத்திரப் பிரதேச நண்பர்கள் ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா, ஹிந்தி-இந்தியா வேண்டுமா என தீர்மானித்துக் கொள்ளட்டும்; தேர்வு அவர்களுடையது. என்றார்.

மூன்று ஆண்டுகள் தீவிரமான வாதங்களுக்குப் பிறகு 1949 ஆம் ஆண்டு மன்றம் ஓர் இணக்கமான முடிவுக்கு வந்தது. அத்தீர்வில், 'தேசிய மொழி என்பதே வரையறுக்கப்படவில்லை'. அதற்கு பதிலாக ஒன்றியத்தின் அலுவலக மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டன.

தேவநாகரி எழுத்துருவில் அமைந்த ஹிந்தி இந்திய ஒன்றியத்தின் அலுவலக மொழியாக தேர்வு செய்யப்பட்டது. பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் அனைத்து அலுவலக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும். ஐந்து ஆண்டுகள் கழித்து ஹிந்தியை வளர்க்கவும் ஆங்கிலத்தைப் படிப்படியாக விலக்கவும் வழிவகை காண ஓர் மொழி ஆணையம் ஏற்படுத்தப்படும். மாநிலங்களுக்கிடையேயான தொடர்புகளும் மாநிலங்களுக்கும் ஒன்றியத்திற்கும் இடையேயான தொடர்புகளும் ஒன்றியத்தின் அலுவலக மொழியில் அமையும் ஆங்கிலம் அனைத்து சட்ட நடிவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும். அறங்கூற்று மன்றங்கள், சட்டங்கள், மசோதாக்கள், விதிகள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் இந்தியின் பரவலையும் பயன்பாட்டையும் வளர்ப்பது ஒன்றியத்தின் கடமையாகும்.

ஹிந்தியுடன் ஆங்கிலமும் இணை அலுவலக மொழியாக விளங்கியதை ஹிந்தி ஆதரவாளர்கள் குறை கூறி வந்தனர்; பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் 'சியாமா பிரசாத் முகர்ஜி' ஹிந்தி மட்டுமே தேசியமொழியாக வேண்டும் என்று கோரினார். இந்தியக் குடியரசு 1950, சனவரி 26-இல் நிறுவப்பட்டப்பின்னர், ஹிந்தியை அலுவலக மொழியாகப் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1952 ஆம் ஆண்டு நடுவண் கல்வித்துறை, விருப்பமாக ஹிந்தி பயிலும் திட்டத்தைத் துவக்கியது. 27 மே, 1952ல் அறங்கூற்றுமன்ற பிடியாணைகளில் ஹிந்தி அறிமுகப்படுத்தப்பட்டது. 1955ஆம் ஆண்டு அனைத்து நடுவண் அரசுத்துறைகளிலும் ஹிந்தி பயிலும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. 3 திசம்பர் 1955 முதல் அரசு ஒன்றியத்தின் குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கு ஹிந்தியை (ஆங்கிலத்துடன்) பயன்படுத்தத் தொடங்கியது.

அரசியலமைப்பின் 343வது உட்பிரிவில் வரையறுக்கப்பட்டவாறு, முதல் அலுவலக மொழி ஆணையத்தை பி.ஜி.கேர் என்பவர் தலைமையில் 7 சூன், 1955ல் நேரு அமைத்தார். ஆணையம் தனது அறிக்கையை 31 சூலை, 1956 அன்று அளித்தது. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஹிந்தியைக் கொணர ஆணையம் பல வழிகளைக் குறிப்பிட்டிருந்தது. ஆணையத்தின் இரு ஹிந்தி பேசாத உறுப்பினர்கள், தமிழ்நாட்டிலிருந்து பி.சுப்பராயன், மேற்கு வங்காளத்திலிருந்து சுனிதி குமார் சாட்டர்ஜி ஆகியோர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. கேர் ஆணைய அறிக்கையை ஆய்வு செய்ய கோவிந்த் வல்லப் பந்த் தலைமையிலான அரசு மொழிக்கான நாடாளுமன்றக் குழு செப்டம்பர் 1957ல் அமைக்கப்பட்டது. அக்குழு இரு ஆண்டுகள் விவாதித்து 8 பிப்ரவரி 1959ஆம் ஆண்டு தனது அறிக்கையை வெளியிட்டது. அது ஹிந்தியை முதன்மையான அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை துணைமொழியாகவும் பரிந்துரைத்தது. 

'கேர் மற்றும் பந்த் அறிக்கைகள் இரண்டுமே சுனிதி சாட்டர்ஜி, சுப்பராயன், பிராங்க் அந்தோணி போன்ற ஹிந்தி பேசாத அரசியல்வாதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.' 

ஆங்கிலம் தரும் வசதிகள் போன்றவற்றிற்காக அல்லாது ஹிந்தி பேசா மக்கள் அரசுடன் ஹிந்தி மொழியில் தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்தப்படுவதால் தங்கள் முன்னேறும் வழிகள் அடைபட்டுள்ளதாகக் கருதுவதை நான் விரும்பாததால் காலவரையின்றி - எத்தனை காலம் என்று நானறியேன் - ஆங்கிலம் இணை, கூடுதல் மொழியாக இருக்க வேண்டும்; இருக்கும். அவர்கள் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளலாம். ஆகவே மக்கள் விரும்பும்வரை அதனை மாற்று மொழியாக வைத்திருப்பேன்; இதற்கான முடிவு எடுப்பதை ஹிந்தி பேசும் மக்களிடம் அல்லாது ஹிந்தி பேசாத மக்களிடமே நான் விடுவேன். ஏன்று நேரு உறுதிமொழி அளித்தார்.

புதிய இந்திய அரசியலமைப்பு சனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் அப்போதைய ஆட்சியாளர்களால் முடித்துக் கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து ஹிந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க அரசு மேற்கோண்ட முயற்சிகளின் போது, ஹிந்தி பேசாத மற்ற மாநிலங்கள் சப்பையாக இருந்தன.  தமிழகத்தில் மட்டும் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. 

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. இந்த எதிர்ப்புகளை சமாளிக்கும் விதமாக அப்போதைய இந்தியத் தலைமைஅமைச்சர் ஜவஹர்லால் நேரு 1963ஆம் ஆண்டில் கொண்டு வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலம் அரசுமொழியாக விளங்க வழி செய்தார். 

26சனவரி,1965 நாள் நெருங்கிவந்த காலத்தில் நேருவின் வாக்குறுதி காற்றில் பறக்கவிடப் பட்டது. ஹிந்தித் திணிப்பு ஆணைகள் வடக்கில் இருந்த பறந்து வந்தன. தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் தொடங்கியது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய போராட்டம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இக்கலவரங்களில் 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் தலைமைஅமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, ஹிந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது.

இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, ஹிந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. திராவிடர் கழகம் ஒரு அனைத்துக் கட்சி ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி ஹிந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், கருப்புக் கொடி போராட்டங்கள் அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் தற்காலிக சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; பின்னர் ஹிந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. ஹிந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் ஹிந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.


1963ஆம் ஆண்டு இந்திய சீனப் போர் மற்றும் அரசியலமைப்பின் 16வது திருத்தமாக இயற்றப்பட்ட பிரிவினை தடுப்புச்சட்டத்தின் பின்னணியில் திமுக பிரிவினை கோரிக்கையை விட்டது. ஆயினும் தனது ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு நிலையைத் தொடர்ந்தது. 1963ஆம் ஆண்டு அலுவல்மொழிச் சட்டம், நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த எதிர்ப்பு மேலும் வலுவடைந்தது. 

ஹிந்தியை முதன்மை அலுவல் மொழியாக மாற்றிட அரசியலமைப்பின் பகுதி 17வது குறிப்பிட்ட வரையறை நெருங்கும் வேளையில் நடுவண் அரசு ஹிந்தியின் பயன்பாட்டை அரசு செயல்பாடுகளில் கூடுதலாக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியது. 1960இல் அரசு அலுவலகங்களில் ஹிந்தி தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துப் பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டன. அதே ஆண்டு குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், பந்த் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, ஹிந்தி கலைச்சொற்கள் மொழிபெயர்ப்பு, அரசு நடவடிக்கை மற்றும் சட்ட ஆவணங்களின் மொழிபெயர்ப்பு, நடுவண் அரசு அலுவலகங்களில் ஹிந்திக் கல்வி மற்றும் ஹிந்தி மொழியை பரப்புவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றிற்கு வழி செய்யும் ஆணை ஒன்றை வெளியிட்டார்.

1959ஆம் ஆண்டு நேரு கொடுத்த வாக்குறுதிக்கு சட்ட ஏற்பு கொடுக்கும் வண்ணம் அலுவல்மொழி சட்டம் 1963ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதை மன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது நேரு கடந்த கால நிகழ்வுகளைக் கருத்தில் இருத்தி, அரசியலமைப்பில் 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆங்கிலத்தைத் தொடர்வதில் உள்ள தடங்கல்களை நீக்கும் வண்ணம் இந்த வரைவுச்சட்டம் கொண்டுவரப்படுகிறது. இது அந்த கட்டுப்பாட்டை நீக்கும் என்று கூறினார்.

1965இல் வரலாறு காணாத ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து, லால் பகதூர் சாஸ்திரியின் வாக்குறுதிகளுக்கிணங்க, முதன்மை அலுவல் மொழி ஹிந்தி அமலாக்கத்தை மிதப்படுத்தும் வகையில் ஓர் தீர்மானத்தை நிறைவேற்றியது. பொதுச்சேவை தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் ஆங்கிலத்தின் வீச்சைக் குறைக்க தீர்மானம் இயற்றியது. இந்த முடிவுகள் 24 பிப்ரவரியில் நடந்த மாநில முதலமைச்சர்கள் மாநாட்டிலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.

லால் பகதூர் சாஸ்திரி உருசியாவில் நடந்த அமைதிப் பேச்சுகளின்போது மரணமடைந்தார். அவரை அடுத்து இந்திரா காந்தி பிரதமராகப் பதவியேற்றார். 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரசிற்கு குறைந்த பெரும்பான்மையே கிடைத்தது. தமிழ்நாட்டில் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. மும்மொழித் திட்டம் கைவிடப்பட்டு ஹிந்தி முழுமையாக கல்வித்திட்டதிலிருந்து விலக்கப்பட்டது. தமிழும் ஆங்கிலமும் மட்டுமே பயிற்றுவிக்கப் பட்டது.

நடுவண் அரசை ஹிந்திக்கு அளிக்கப்படும் தனிநிலையை முடிவுக்குக் கொண்டுவந்து அனைத்து மொழிகளுக்கும் சமநிலை அளிக்க வற்புறுத்தியது. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கு நிதி உதவி அளித்திட இந்திய அரசைக் கோரியது.

1986 ஆண்டு இந்தியப் தலைமைஅமைச்சராக இருந்த ராஜீவ் காந்தி தேசிய கல்விக் கொள்கையை முன்னெடுத்தார். இந்தக் கொள்கை நாடெங்கிலும் நவோதயா பள்ளிகள் நிறுவிட வழி செய்தது. 

அந்த நேரம் திமுகவிலிருந்து பிரிந்து உருவான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார். திமுக முதன்மை எதிர்க்கட்சியாக இருந்தது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.