Show all

இருமொழித் திட்டமே எங்களுக்கு தவிர்க்க முடியாத கூடுதல்! மும்மொழி திட்டம் வேண்டவே வேண்டாம். தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

நடுவண் அரசு புதிய கல்வித்திட்டத்தில் திருத்தம் செய்திருப்பதாக கூறுவது மாற்றமல்ல! மீண்டும் மாநிலக் கல்வி உரிமையைப் பறித்து, மும்மொழிக் கொள்கையைத் திணித்து, ஹிந்தி மொழி கட்டாயமல்ல; மற்ற மொழிகளைப் படிக்கலாம் என்று இப்போது கூறி, சில காலம் சென்றவுடன், மீண்டும் ஹிந்தியே மூன்றாவது மொழியாக இருக்கலாம் என்று பலரும் விரும்புகிறார்கள் என்று சாக்குப் போக்கு தந்திரங்கள் செய்து, வெளி வாசல் வழியாக நுழைக்கப்பட முடியாத ஹிந்தியை கொல்லைப்புற வழியாக நுழைப்பதற்கு இது ஒரு தந்திர சூழ்ச்சி முன்னோட்ட முயற்சியேயாகும் என்பதை தமிழர்கள் அறிவர். இருமொழித் திட்டமே எங்களுக்கு தவிர்க்க முடியாத கூடுதல்! மும்மொழி திட்டம் வேண்டவே வேண்டாம். என்பதில், தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஹிந்தி கட்டாயம் இல்லை, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று நடுவண் அரசு திருத்தப்பட்ட புதிய கல்விக்கொள்கை வரைவு வெளியிட்டிருக்கிறதாம். பாஜகவினரும் பாஜக ஆதரவு ஊடகங்களும் பீற்றிக் கொள்கின்றன.
ஹிந்தி கட்டாயம் இல்லை, 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம். சரி, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் விரும்பும் மாணவர்களுக்கு கற்பிக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்களா? தனியார் பள்ளிகள் இந்த வேலையை முன்னெடுக்குமா? இந்த பள்ளியில்தான் என் பிள்ளை படிக்கும் என்று கனவு காணும் பாமர மக்களின் கனவுப் பள்ளிகள் இந்த வேலையை முன்னெடுக்குமா? தானாக எல்லாப் பள்ளிகளும் எங்கள் பள்ளியில் மூன்றாவது மொழியாக ஹிந்தியைப் பயிற்றுவிக்க மட்டுமே ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று தெரிவித்து விடுமே. 

தற்போது மட்டுமென்ன? தமிழகத்தில் உள்ள நடுவண் அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் இந்தக் கதைதானே நடக்கிறது. மாணவர்கள் விரும்பினால் தமிழை ஒரு பாடமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நடுவண் அரசு வாய்ப்ப வழங்கியும், தமிழ் ஒரு பாடமாக எந்தப் பள்ளியிலும் இல்லையே தமிழே இல்லாமல் தானே தமிழகப் பிள்ளைகள் அந்தப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். 

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய திருத்தப்பட்ட கல்விக்கொள்கை வரைவுத்திட்டம் நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சக  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஹிந்தி மொழி பேசாத மாநிலங்களில் ஹிந்தி கட்டாயம் பயில வேண்டும் என்பது நீக்கப்பட்டுள்ளது. விருப்பத்தின் அடிப்படையில் 3-வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் சாத்தியப் படுத்தப் படாதே.

இதன்மூலம்,  தமிழகத்தில் 3-வது மொழியாக ஹிந்தி மொழி பயில வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்ற போர்வையில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக ஹிந்தியை மூன்றாவது  மொழியாக தேர்வு செய்து படிக்க நிர்பந்திக்கப் படுவார்கள்.

எனவே: இருமொழித் திட்டமே எங்களுக்கு தவிர்க்க முடியாத கூடுதல்! மும்மொழி திட்டம் வேண்டவே வேண்டாம். என்பதில், தமிழர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,172.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.