Show all

ஒரு கோப்பை நஞ்சு அருந்திய அனுபவத்தைத் தந்தது பாஜகவுடனான கூட்டணி: மெஹபூபா முப்தி

12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரசுக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு சிறிது காலம் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது. பின்னர் நேர் எதிர் கொள்கைகளை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

இருகட்சிகளுக்கும் இடையே பல முரண்பாடுகள், நெருக்கடிகளுக்கு இடையே கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக அறிவித்தது. இதனால் மெஹபூபா பதவி விலகினார். அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவன நாள் கொண்டாட்டத்தை யொட்டி நடந்த நிகழச்சியில் கலந்து கொண்டு மெஹபூபா முப்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதையடுத்தே பாஜகவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி முன் வந்தது. இருப்பினும் அது மிக மோசமான அனுபவத்தையே கொடுத்தது. மாநிலத்தின் நலனுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செய்ய பாஜக விடவில்லை. மாநிலத்தில் அமைதியை திரும்பச் செய்யும் முயற்சிக்கு நடுவண் அரசு ஒத்துழைப்பு தரவில்லை.

ஒரு கோப்பை நஞ்சை அருந்தியது போலவே கூட்டணி அரசு இருந்தது. பாகிஸ்தானுடனான நல்லுறவு, காஷ்மீருக்கு சிறப்பு பொருளாதார திட்டம் என நான் கேட்ட எதையும் மோடி ஏற்கவில்லை. பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையில் புதிய அரசு பதவியேற்க உள்ளது. திறந்த மனதுடன், காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க அவர் யோசனை தெரிவித்துள்ளார். அதை ஏற்று நடுவண் அரசு காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க முன் வர வேண்டும். இவ்வாறு மெஹபூபா முப்தி பேசினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,862.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.