Show all

முதல்வர் பினராயி உத்தரவால் காவலர்களுக்கு எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை ஒழிகிறது

04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில் பின்பற்றப்பட்டு வரும் காவலர்களுக்கு எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று உறுதியளித்தார்

திருவனந்தபுரத்தில் ஆயுதப்படை பிரிவு காவல்துறை துணைத்தலைவராக இருப்பவர் சுதேஷ் குமார். இவரது அலுவலக கார் ஓட்டுநரான கவாஸ்கர் காரை தாமதமாக எடுத்து வந்தார் என்பதற்காக சுதேஷ் குமாரின் மகள் ஸ்னிகிதா குமார் அவரை கடுமையாகத் திட்டியுள்ளார். இதனால் கவாஸ்கர் 'காரை எடுக்க முடியாது' என்று கூறவே, அவரின் கழுத்திலும், முகத்திலும் தனது செல்பேசியால் தாக்கியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான காவலர் கவாஸ்கர்,

இது குறித்து கவாஸ்கர் காவல்துறையில் புகார் செய்ய முயற்சிக்கவே உயரதிகாரிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால், அந்த மிரட்டலுக்குப் பணியாததால், சுதேஷ் குமார் மகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல, ஸ்னிகிதாவும் பதிலுக்கு கவாஸ்கர் மீது புகார் அளித்தார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் விஸ்வரூபம் எடுக்கவே, காவல்துறை துணைத்தலைவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும், கேரள காவல் துறை அமைப்பும் கீழ்நிலையில் பணியாற்றும் காவலர்களை உயரதிகாரிகள் மனிதநேயத்தோடு நடத்தாததைக் கடுமையாகக் கண்டித்தன. இந்த விவகாரம் தீவிரமடையவே காவல் துறை தலைவர் லோக்நாத் பேரா, மாநிலத்தில் எத்தனை காவல் துறையினர் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை பணியில் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க உத்தரவிட்டார். மேலும், கவாஸ்கர், ஸ்னிகிதா புகாரை குற்றப்பிரிவு துணைத் தலைவர் விசாரிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கேரளாவில் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், இன்று கவாஸ்கர், ஸ்னிகிதா விவகாரம் எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் எழுந்து பேசுகையில், காவல்துறையில் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை பணியில் இருந்த கவாஸ்கர் தாக்கப்பட்டது மனிதநேயமற்றது. அவரைத் தாக்கிய காவல்துறை துணைத் தலைவர் மகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கவாஸ்கர் என்னுடைய தொகுதியைச் சேர்ந்தவர். காவல்துறை துணைத் தலைவர் மகள் கவாஸ்கரை 7 முறை கழுத்தில் தனது செல்பேசியில் தாக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் கவாஸ்கரின் புகாரை வாங்காமல் காவல் துறை உயரதிகாரிகள் 10 மணிநேரம் தாமதம் செய்துள்ளனர் என்று பேசினார்.

இதற்குப் பதில் அளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:

ஆங்கிலேயர் காலத்தில் காவல் துறையில் இந்த எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பழக்கம் இங்கு இருந்து வருகிறது. கவாஸ்கர் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான விசாரணை குற்றவியல் காவல்துறை துணைத்தலைவர் மூலம் நடந்து வருகிறது.

அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அரசு எந்தவிதமான மனித உரிமை மீறலிலும் ஈடுபடாது என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன். அடிப்படை மனித உரிமைகள் என்பது கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவிதமான மனித உரிமை மீறலையும், மீறல் நடப்பதையும் இந்த அரசு வேடிக்கை பார்க்காது.

தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை பணியில், உயரதிகாரிகளின் வீட்டுப் பணியிலும், அலுவலகப் பணியிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் இந்த முறை இனி கேரளாவுக்கு தேவையில்லை, இந்த முறை ஒழிக்கப்படும் என்று நான் உறுதி கூறுகிறேன். அதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகும்.'

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

தமிழகத்திலும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை தொடர்ந்து வருகிறது. காவல் துறை உயர் அதிகாரிகளின் வீடுகளிலும், அலுவலங்களிலும் எடுபிடி வேலை செய்யவும், தோட்டவேலை, வீட்டுவேலை, அலுவலக வேலை செய்யவும் கீழ்நிலையில் உள்ள காவலர்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறையை ஒழிக்கக் கோரி, சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு அறங்கூற்றுவர் கிருபாகரன் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல் துறையில் எத்தனை காவல் துறையினர் இந்த முறையில் இருக்கிறார்கள் என்று கணக்கெடுத்து பதிகை செய்ய உத்தரவிட்டார். ஆனால், பதில் மனு பதிகையில் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை காவல் துறையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதை அறங்கூற்றுவர் கிருபாகரன் ஏற்காமல் வழக்கை தள்ளிவைத்தார்.

பல கனவுகளோடு காவல் துறை வேலைக்குத் தேர்வானாலும், காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறையால் சில காவலர்கள் அந்தப் பணிக்கு மாற்றப்படுகின்றனர். அங்கு எடுபிடி வேலைக்கும், அதிகாரிகளின் வீட்டு வேலைக்கும் பயன்படுத்தப்பட்டு மனிதநேயமின்றி நடத்தப்படுவதாகவும் காவல் துறையினர் மனவேதனை தெரிவிக்கின்றனர்.

அண்டை மாநிலமான கேரளாவில் காவல் துறை துறையில் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து விட்டார். தமிழக காவல் துறையில் எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை எப்போது ஒழிக்கப்படும் என்பது தமிழக காவல் துறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மக்களின் எதிர்பார்ப்போ! பாவம் ஆட்சியாளர்களே நடுவண் பாஜக அரசின் எடுபிடியாகத்தானே பணி ஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள் என்பதாக இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,822.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.