Show all

தமிழகத்தின் வேண்டல்கள்! தலைமைஅமைச்சரின் காணொளி கலந்துரையாடலில் தமிழகத்தின் சார்பாக

கொரோனா வகைக்காக, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நான்காவது முறையாக நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மாநில முதல்வர்கள் தங்களது கருத்துகளைத் தலைமைஅமைச்சருக்கு தொலைஎழுத்து மூலமாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர். தமிழகம் தெரிவித்த கருத்துக்கள்.

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா வகைக்காக, தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி நான்காவது முறையாக நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். 

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி தலைமைஅமைச்சர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அவருடன் நலங்குத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், காவல்துறைத் தலைவர் ஜே.கே.திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முதலாவதாக நேற்று நடைபெற்ற காணொலி ஆலோசனை கூட்டத்தில் ஒன்பது மாநில முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. மற்ற மாநில முதல்வர்கள் தங்களது கருத்துகளை தலைமைஅமைச்சருக்கு தொலைஎழுத்து மூலமாக அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தொலைஎழுத்து (பேக்ஸ்) மூலம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுப்பிய உரையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
1. தமிழகத்திற்கு சேரவேண்டிய சரக்குசேவை வரியின் கடந்த ஆண்டுக்குரிய நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும்.

2. தமிழகத்தில் தற்போது கொரோனா பரிசோதனைக்காக, 30 அரசு மற்றும் 11 தனியார் சோதனைக் கூடங்கள் உள்ளன. இதன் அளவு, நாளொன்றுக்கு 7,500 பரிசோதனைகள் என்றுள்ளது. இந்த எண்ணிக்கையை 10 ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். எங்களுக்கு கூடுதல் எண்ணிக்கையில் ‘பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை’ கொரோனா  சோதனை கருவிகளை நடுவண் அரசு அனுப்ப வேண்டும்.

3. நுகர்வோருக்கு நேரடியாக வேளாண் உற்பத்தியை உழவர்கள் கொண்டு சேர்க்கும் வகையில் வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு போக்குவரத்து மானியத்தை அளிக்க முன்வர வேண்டும். 

4. காணொலி காட்சி மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் மருத்துவ கருவிகள் வாங்குவதற்கான நிதியை கோரியிருக்கிறேன். அந்த தொகையை உடனே கொடுக்க வேண்டும்.

5. சரக்கு சேவைவரி மாநில பங்கு அளவை 3 விழுக்காட்டில் இருந்து 4.5 விழுக்காடாக உயர்த்தி அதை நிலுவை வைத்துள்ள தொகைக்கும் கணக்கிட்டு வழங்க வேண்டும். 

6. நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தில் 50 விழுக்காட்டை உடனே வழங்க வேண்டும்.

7. மருத்துவ மற்றும் கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1,000 கோடியை மானியமாக வழங்க உடனடியாக தமிழகத்துக்கு அனுமதிக்க வேண்டும்.

8. நடுவண் அரசின் திட்டத்துக்குக் கீழ் வரும் பயனாளிகள் உள்பட அனைத்து குடும்;ப அட்டைதாரருக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கும் வகையில் கூடுதலாக அவற்றை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். அரிசி கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் நெல் அரவை மானியத் தொகை ரூ.1,321 கோடியை வழங்க வேண்டும்.

9. தமிழகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகளும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் அதிகமாக உள்ளனர். அந்த தொழிலாளர்கள் ஊதியத்தை பெறும் வகையிலும், தொழிலாளர் வைப்பு நலநிதி,  தொழிலாளர் காப்பீட்டு நலநிதி பாக்கிகளைச் செலுத்தும் வகையில் அந்தப் பிரிவுக்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். 

10. நடுவண் அரசு முன்கூட்டி வாங்கிக் கொண்டிருக்கும் சரக்குசேவைவரி மற்றும் வருமான வரி ஆகியவற்றை சிறு குறு தொழில்களின் நன்மைக்காக 6 மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.