Show all

மூடிக்கொண்ட ஓசோன் படல மாபெரும்துளை! விமானம் உள்ளிட்ட வாகன மற்றும் தொழிற்சாலை நிறுத்தத்தால் காற்று மாசுபாடு குறைந்ததாலா

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று தெரியவருகிறது. காரணம் குறித்து, சமூக ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் மாறுபடுகின்றனர்.

15,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று தெரியவருகிறது.

கதிரவன் ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை புவிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. புவியைச் சுற்றிலும் காணப்படும் இந்த ஓசோன் எனப்படும் மூவணு உயிர்வளி, சுற்றுச்சூழல் சமநிலையை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆனால், வாகனங்களின் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்ஸைடு உள்ளிட்ட மாசுக்காற்றுகளால் ஓசோன் படலத்தில் கடந்த காலங்களில் ஆங்காங்கே பெரிய பெரிய துளைகள் ஏற்பட்டன. இந்தச் சூழ்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா நுண்ணுயிரி பரவியதால் உலக நாடுகளில் வெவ்வேறுகால கட்டங்களில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த ஊரடங்கில், பல்வேறு நாடுகளில் இயங்கி வந்த தொழிற்சாலைகள் கால வரையின்றி மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் புவியில் இருந்து வெளியாகும் மாசுக்களின் அளவும் வெகுவாக குறைந்தன.

இந்நிலையில், செயற்கைக்கோள் உதவியுடன் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அதிசயிக்கும் விதமாக ஓசோனில் ஏற்பட்டிருந்த மாபெருந்துளை தாமாக மூடிக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐரோப்பிய மையத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை  மற்றும் கோப்பர்நிக்கஸ் வளிமண்டல கண்காணிப்பு சேவை ஆகியவை இதனை உறுதிப்படுத்தின.

ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த மிகப்பெரிய துளை தாமாக மூடிக்கொண்டதற்கு, பூமியில் இருந்து வெளியாகும் காற்று மாசுபாடு அளவு குறைந்ததே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர், ஆனால், இந்தக் கூற்றினை விஞ்ஞானிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். 

ஓசோனில் மிகப்பெரிய துளை ஏற்பட்டதும் அதுதாமாக மூடியதும் போலார் வோர்டெக்ஸ் எனப்படும் வாயு சுழற்சியே காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.