Show all

நீட் தேர்வோ, தமிழகத்தில் நடந்து வந்த நுழைவுத் தேர்வோ அறிவாற்றல் சோதிப்புக்கானதன்று

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வோ, தமிழகத்தில் நடந்து வந்த நுழைவுத் தேர்வோ அறிவாற்றல் சோதிப்புக்கானதன்று! எந்த அளவிற்கு அந்தப் பாடங்களில் மாணவர்கள் பயிற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதை சோதிப்பதற்கான தேர்வு என்பதே உண்மை. 

அறிவாற்றால் என்பது காரோட்டும் கல்வி நிறுவனத்தில், கார் ஓட்டக் கற்றுக் கொண்டு கார் ஓட்ட உரிமம் எடுப்பது வரையிலானது. பயிற்சி ஆற்றல் என்பது- முன்பே நன்கு பயிற்சி பெற்ற அப்பாவோடு, நண்பர்களோடு தொடர் பயிற்சி எடுப்பது. பயிற்சியைப் பொறுத்தவரை எடுக்கிற முயற்சி அளவுக்கு இலகுவாகும். 

பள்ளியில் பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் அறிவாற்றலைச் சோதிப்பதற்கானது. 

எந்த நுழைவுத் தேர்வுகளும், நீட் நுழைவுத் தேர்வும் அந்தத் துறையில் அவன் பெற்றிருக்கிற பயிற்சி ஆற்றலைச் சோதிப்பதற்கானது. 

கொத்தனாருக்கு வீடு கட்டத்தெரியும். அந்த வீட்டிற்கு வரைபடம் கொடுத்த பொறியாளருக்கு வீடு கட்டத் தெரியாது. கொத்தனார் மிக நீண்ட நெடிய பயிற்சியில் வீடு கட்டக் கற்றுக் கொண்டவர். பொறியாளர் மிகமிக குறைந்த முயற்சியில் வீட்டைக் கட்ட கற்றுக் கொண்டு விட முடியும். 

அந்தப் பொறியாளருக்கு வீடு கட்டத் தெரியுமா என்று சோதிப்பன தாம் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள்.

நமக்கு அழகான ஒரு வீடு கட்ட வேண்டும். நமது வீட்டை கட்ட 25 பொறியாளர்கள் விண்ணப்பிக்கிறார்கள். 24 பொறியாளர்களை எப்படி புறக்கணிப்போம்? அனுபவத்தின் அடிப்படையில் புறக்கணிப்போம் அல்லவா? 

அந்த வகைக்கான முயற்சிதாம் இந்த நீட் தேர்வு. தமிழக மாணவர்களுக்கு ஓரளவிற்கு போட்டியில்லாமல் மருத்துவம் பயில வாய்ப்பளிப்பதற்கு கல்லூரிகளும், மருத்துவ மனைகளும் தமிழகத்தில் இருக்கின்றன. அதனால் நமக்கு நுழைவுத் தேர்வு தேவையேயில்லை என்று தான் அதை நாம் எடுத்து விட்டோம். 

ஆனால் நடுவண் அரசு பாடத்திட்டத்தில் பயிலுவோருக்கான மருத்துவக் கல்வி வழங்க போதுமான கல்லூரிகள், மருத்துவமனைகள் நடுவண் அரசு வசம் இல்லை. நடுவண் அரசு மருத்துவமனைகளை, கல்லூரிகளை உருவாக்க முயலாமல் தமிழக மருத்துவக் கட்டுமானங்களைப் பயன் படுத்திக் கொள்வதற்கான யுக்திதான் நீட்.

இன்னொரு உண்மை தெரியுமா? இதே நீட் தேர்வை எழுதுவதற்கு தமிழக மாணவர்களுக்கு இரட்டிப்பு நேரம் கொடுத்தால் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடை எழுதுவார்கள். 

குறைந்த நேரத்தில் சரியான விடையை சரிஅடையாளம் குறிப்பதற்கும், அவசரத்தில் குறித்த விடை தவறாகிப் போனால் பெற்ற மதிப்பெண்ணில் கழிக்க படுகிற மதிப்பெண் முறைகளுக்கான பயிற்சி இன்மையே தமிழக மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதற்காண  காரணம். 

ஆக தமிழக பாடத்திட்டத்திலோ, தமிழக மாணவர்களிடமோ இருப்பது அறிவுக் குறைபாடல்ல பயிற்சிக் குறைபாடுதான். ஒரு இலட்சம் வினாக்களில் மாற்றி மாற்றி பயிற்சி எடுத்துக் கொள்கிற நேரமோ, பொருளாதாரமோ தமிழக மாணவர்களுக்கு கிடைப்பதற்கில்லை என்பதுதான் உண்மை. 

எதுவும் எப்படியும் இருக்கட்டும் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருப்பது மட்டுமே நமக்கான அதிகாரமாக இருக்க முடியும். அதை நடுவண் அரசு பொதுப்பட்டியலில் வைத்துக் கொள்வது அவர்கள் ஆளுகிற கட்சிக்கேற்றவாறு திணிக்கிற ஒவ்வொரு முயற்சிகளுக்கும் வளைந்து போக வேண்டிய அடிமைத்தனமாகும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,811. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.